×

பூந்தமல்லி – போரூர் மெட்ரோ வழித்தடத்தில் 90 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கி பாதுகாப்பு சோதனை: மெட்ரோ நிர்வாக இயக்குநர் சித்திக் தகவல்

சென்னை, ஆக.20: பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பூந்தமல்லி – போரூர் மெட்ரோ வழித்தடத்தில் 90 கி.மீ. வேகத்தில் ரயில்களை இயக்கி பாதுகாப்பு சோதனை தொடங்கியுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் இயக்குநர் சித்திக் தெரிவித்துள்ளார். சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டத்தில், பூந்தமல்லி புறவழிச்சாலை – போரூர் சந்திப்பு வரையிலான வழித்தடத்தில் பயணிகள் சேவை தொடங்குவதற்கு முன்னதாக, பாதுகாப்பு சான்றிதழ் பெறுவதற்கான சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளது. ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய ரயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர நிர்ணய அமைப்பு மூலம் இந்த சோதனை நடத்தப்படுகின்றன. மெட்ரோ ரயில் பெட்டிகளுக்கான சான்றிதழை பெறுவதற்கு பின்பற்றப்படும் நடைமுறைகளின்படி இந்த சோதனைகள் நடைபெறுகின்றன. இந்த நடைமுறையின்படி, இந்திய ரயில்வே அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆர்டிஎஸ்ஓ அமைப்பானது தொழில்நுட்ப ஒப்புதல் மற்றும் பாதுகாப்புச் சான்றிதழ் வழங்குகிறது.

கடந்த 16ம் தேதி முதல் இந்த சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும் அவை சுமார் 2 வாரங்களுக்கு தொடரும். இந்த காலகட்டத்தில், மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு பயணிகளின் பயண வசதி மதிப்பீடு செய்யப்படுகிறது. அத்துடன், வழித்தடத்தில் ரயில்களின் இழுவை மற்றும் பிரேக்கிங் செயல்திறன் பற்றிய விரிவான சரிபார்ப்பும் செய்யப்படுகிறது. இந்த சோதனைகள் வெற்றிகரமாக முடிந்தால், புதிய வழித்தடம் மற்றும் மெட்ரோ ரயில்கள் பாதுகாப்பு தரங்களுக்கு இணங்குவதை உறுதி செய்யும். மேலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படுவதற்கு முன்பு பயணிகளின் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும். சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் முன்னிலையில் இந்த பாதுகாப்பு சான்றிதழ் சோதனைகள் நடைபெற்றன.

இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சித்திக் கூறியதாவது: சென்னையில் 2ம் கட்ட மெட்ரோ திட்டத்தின் முன்னேற்றத்தில், பாதுகாப்பு சான்றிதழ் சோதனைகள் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. பூந்தமல்லி புறவழிச்சாலையில் இருந்து போரூர் சந்திப்பு வரையிலான இந்த வழித்தட பகுதி 1ஏ, 9 நிமிடங்களில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் இந்த சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையின் மிக உயர்ந்த தரங்களை பூர்த்தி செய்வதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம். நிலையான முன்னேற்றத்துடன், பொதுமக்களின் நலனுக்காக இந்த திட்டத்தை விரைவில் செயல்படுத்துவதை நோக்கமாக கொண்டு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குநர்கள் அர்ச்சுனன் (திட்டங்கள்), கிருஷ்ணமூர்த்தி (நிதி), மனோஜ் கோயல், (அமைப்புகள் மற்றும் இயக்கம்), தலைமைப் பொது மேலாளர் ராஜேந்திரன், மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் பொது ஆலோசகர் நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Tags : Poontamalli — ,Borur Metro Route ,Metro Managing Director ,Siddiq ,Chennai ,Poontamalli-Borur Metro Line ,Metro Administration ,Chennai Metro ,
× RELATED மெத்தாம்பெட்டமின் விற்றவர் சிக்கினார்