* பெண்களும் திரண்டனர்; தங்கச்சிமடத்தில் பரபரப்பு, தாம்பரம் எக்ஸ்பிரஸ் தாமதமாக கிளம்பிச் சென்றது
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் வாடும் மீனவர்களையும், பறிமுதல் செய்த படகுகளையும், ஒன்றிய அரசு மீட்டு தர வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த 11ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டத்தையும் நடத்தினர்.
கடந்த 8 நாட்களாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் துறைமுகத்தில் கரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலை இழந்து ரூ.10 கோடி மதிப்பிலான மீன் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் ஒன்றிய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், மீனவர்கள் ஏற்கனவே அறிவித்தப்படி, தங்கச்சிமடம் பகுதியில் நேற்று ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.
அனைத்து விசைப்படகு மீனவ சங்க தலைவர் ஜேசுராஜ் தலைமை வகித்தார். மீனவ சங்க பிரதிநிதிகள் எமரிட், காரல் மார்க்ஸ், ராயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாதிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள், பல்வேறு அரசியல் கட்சியினர், தன்னார்வலர்கள், மீனவ மக்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அனைவரும் தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.
போராட்டத்திற்கு வலு சேர்க்க காவிரி வைகை குண்டாறு பாசன கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அர்ச்சுனன் தலைமையில் விவசாய சங்கப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசின் மெத்தன போக்கை கண்டித்து கோஷமிட்டனர். போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அகில இந்திய மீனவ காங்கிரஸ் தேசிய தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ, மதிமுக மாநில மீனவர் அணி செயலாளர் பேட்ரிக், ராமேஸ்வரம் தீவில் உள்ள நாட்டுப்படகு, விசைப்படகு மீனவ சங்கத்தினர், கன்னியாஸ்திரிகள், வணிகர்கள், சமூக ஆர்வலர்கள் என பலதரப்பினரும் கலந்து கொண்டனர்.
தங்கச்சிமடத்தில் மீனவர்களின் ரயில் மறியல் போராட்டத்தால் மாலை 4 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்படும் தாம்பரம் எக்ஸ்பிரஸ் ரயில் 4.50 மணிக்கு புறப்பட்டு தங்கச்சிமடம் போராட்ட பகுதிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்ந்து வந்தது. அங்கு தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் பொதுமக்கள் ஈடுபட்டதால் ரயில் செல்ல முடியாமல் நிறுத்தப்பட்டது. போலீசார் மற்றும் அதிகாரிகள் 15 நிமிடம் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தைக்கு பிறகு மீனவர்கள் கலைந்து சென்றனர். இருப்பினும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 5.10 மணிக்கு தாம்பரம் ரயில் போராட்ட இடத்தை கடந்து சென்றதால் பரபரப்பும் பதற்றமும் நிலவியது.
* ஒன்பது மீனவர்களுக்கு ரூ.9.10 கோடி அபராதம்
பாம்பனில் இருந்து கடந்த ஜூலை 27ம் தேதி கடலுக்கு சென்ற 9 மீனவர்களை, நாட்டு படகுடன் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்தனர். இவர்களது காவல் நேற்று நிறைவடைந்ததை தொடர்ந்து 9 மீனவர்களுக்கும் இந்திய மதிப்பில் ரூ.9 கோடியே 10 லட்சம் அபராதம் விதித்தும், அபராதம் செலுத்த தவறும்பட்சத்தில் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
