×

கமலஹாசனுக்கு கொலை மிரட்டல் துணை நடிகர் ரவிச்சந்திரன் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனு: காவல்துறை பதில்தர உத்தரவு

 

சென்னை: கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகர் ரவிச்சந்திரன் முன் ஜாமீன் கோரிய மனு குறித்து காவல்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் அகரம் அறக்கட்டளையின் நிகழ்ச்சியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசன் பங்கேற்று சிறப்புரை உரையாற்றினார்.

இதையடுத்து, சனாதனம் குறித்து கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து துணை நடிகர் ரவிச்சந்திரன் யூடியூப் வலைதளத்தில் கமல்ஹாசனின் சங்கை அறுத்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியிருந்தார். இது தொடர்பாக ரவிச்சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில் புகார் அளித்தனர்.

இந்நிலையில், தனக்கு முன் ஜாமீன் கோரி ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், எந்த வித உள்நோக்கத்துடன் அவ்வாறு பேசவில்லை என்பதால் ஜாமீன் வழங்க வேண்டுமென்று கோரியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு காவல்துறை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags : Ravichandran ,Kamal Haasan ,Chennai ,Madras High Court ,Agaram Foundation ,Makkal Needhi ,Maiyam ,
× RELATED நாட்டின் பன்முகத்தன்மையை சிதைக்க...