×

கிட்னி மோசடி விவகாரம் சிபிஐ விசாரிக்க முறையீடு

 

மதுரை: கிட்னி மோசடி விவகாரம் குறித்து சிபிஐ விசாரிக்க முறையீடு செய்யப்பட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளையில் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், அருள்முருகன் ஆகியோர், நேற்று வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது வழக்கறிஞர் செந்தில் ஆஜராகி, ‘‘நாமக்கல் மாவட்டத்தில் சட்டவிரோத சிறுநீரக விற்பனை மோசடி நடந்துள்ளது. பள்ளிப்பாளையத்தில் உள்ள விசைத்தறி தொழிலாளர்கள் மற்றும் சாய ஆலைகளில் ஈடுபட்டுள்ள பல ஏழைத் தொழிலாளர்கள் உள்ளிட்டோர் சுரண்டப்பட்டு, சிறுநீரக தானம் செய்பவர்களாக சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களின் நிதிப் போராட்டத்தை அறிந்த இடைத்தரகர்கள், சிறுநீரக தானத்திற்கு ரூ.5 முதல் 10 லட்சம் வரை வழங்கி அவர்களை தயார் செய்கின்றனர். இது மனித உறுப்புகள் மற்றும் திசுக்கள் மாற்று அறுவை சிகிச்சை சட்டம், 1994 ஐ முற்றிலும் மீறுகிறது. மேலும் மனித உறுப்புகளில் வணிக ரீதியான பரிவர்த்தனைக்கு தண்டனையையும் வழங்குகிறது. இதேபோல் திருச்சி மற்றும் பெரம்பலூர் மருத்துவமனைகள் மீதும் இந்த குற்றச்சாட்டு உள்ளது.

இங்கு நடந்த மோசடி குறித்து சுதந்திரமான மற்றும் நியாயமான விசாரணையை உறுதி செய்திடும் வகையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி மனு செய்கிறோம். இதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுவாக தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றனர்.

 

Tags : CBI ,Madurai ,S.M. Subramaniam ,Arulmurugan ,High Court ,Senthil ,Namakkal ,
× RELATED கடும் பனிமூட்டம் காரணமாக சென்னையில்...