×

கட்சியில் சேரவில்லையென மறுப்பு பாஜக மேலிட பொறுப்பாளரை ரகசியமாக சந்தித்த காங்., எம்எல்ஏ

புதுச்சேரி, டிச. 9: பாஜக மேலிடப்பொறுப்பாளரை காங்கிரஸ் எம்எல்ஏ ரகசியமாக சந்தித்து பேசியிருப்பது புதுச்சேரி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. புதுச்சேரி  காங்கிரஸ் அரசை கண்டித்து பாஜக சார்பில் 72 மணி ேநர தொடர் போராட்டம் கடந்த 4ம் தேதி துவங்கியது. நேற்று நடந்த போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி மாநில பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானா கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர், காமராஜர் சாலையில் ஓட்டலில் தங்கியிருந்தார். அவரை என். ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ரங்கசாமி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார்.அப்போது தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து அதிமுக மேற்கு மாநில செயலாளர் ஓம்சக்தி சேகர் சந்தித்தார். இதற்கிடையே காங்கிரஸ் கட்சியில் ஒரு சில எம்எல்ஏக்களும் அவரை சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரசில் உள்ள  எம்எல்ஏக்களில் சிலர் கடந்த சில மாதங்களாக பாஜகவுடன் ரகசிய உறவில் இருப்பதாக அவ்வப்போது தகவல் வெளியானது.  இதற்கு சம்மந்தப்பட்ட எம்எல்ஏக்கள் விளக்கம் அளித்து பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் புதுச்சேரியில் எப்படியாவது பாஜகவை ஆட்சி பொறுப்புக்கு கொண்டுவர வேண்டுமென பாஜக மேலிடம் விரும்புகிறது.

இதனால் மாற்று கட்சியில் உள்ளவர்களை, தங்கள் கட்சிக்கு இழுக்க திட்டமிட்டு காய்களை நகர்த்தி வருகின்றனர்.கட்சியில் சேர்பவர்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை அள்ளி வீசிவருவதாக தெரிகிறது. பாஜக ஆட்சிக்கு வந்தால் அமைச்சர் உள்ளிட்ட பொறுப்புகளை தருவதாகவும், தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்குவதாக கூறி மாற்று கட்சி எம்எல்ஏக்களுக்கு வலைவீசி வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி வந்த மேலிடப்பொறுப்பாளர் நிர்மல்குமார் சுரானாவை காங்கிரஸ் கட்சியை சேர்ந்த காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ ஜான்குமார் சந்தித்திருப்பது புதுச்சேரி அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நிர்மல்குமார் சுரானாவை புதுச்சேரியிலிருந்து  சென்னைக்கு செல்லும் வழியில் திண்டிவனம் சாலையில் ஜான்குமார் ரகசியமாக சந்திக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. காரில் இருந்து இறங்கி வரும் நிர்மல்குமார் சுரானாவுக்கு சால்வை அணிவித்து ஜான்குமார் வாழ்த்து தெரிவிப்பதுபோல் அந்த புகைப்படம் உள்ளது.  இது குறித்து ஜான்குமார் எம்எல்ஏவிடம் கேட்டபோது, ஒருவரை சந்தித்தாலே அந்த கட்சியில் சேர்ந்துவிட்டதாக அர்த்தமாகிவிடாது. அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என தெரிவித்தார். கடந்த  சில மாதங்களாக ஜான்குமார் காங்கிரஸ் கட்சி விழாக்களில் கலந்து கொள்வதை தவிர்த்து வந்தார். சில நாட்களுக்கு முன் தன் வீட்டில் ஏற்றிவைத்திருந்த காங்கிரஸ் கொடியை இறக்கி தனது எதிர்ப்பை கட்சி தலைமைக்கு  தெரிவித்தார். பின்னர் முதல்வர் நாராயணசாமி சமரசம் செய்ததால்  மீண்டு காங்கிரஸ் கொடியை ஏற்றினார்.

இருப்பினும் அவர் ஆளும் அரசின் மீது தொடர்ந்து  கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது. இதனுடைய வெளிப்பாடாக தான் ஜான்குமார், பாஜக மேலிடப்பொறுப்பாளரை சந்தித்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும்  வரும் தேர்தலிலும் நெல்லித்தோப்பு, காமராஜர் நகர் என  இரு தொகுதிகளையும் தனக்குதான் ஒதுக்க வேண்டுமென என நிர்பந்தம் செய்து வந்ததாக தெரிகிறது. இதில் ஏற்பட்ட மன வருத்தத்தால் தான் அவர் பாஜகவை நோக்கி செல்ல உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர். ஜான்குமாரை போல மேலும் சில எம்எல்ஏக்களும் பாஜ மேலிட தலைவரை சந்தித்திருப்பதாக வெளியாகும் தகவலால் காங்கிரஸ் மேலிடம் அதிர்ச்சியடைந்துள்ளது. முதன்முதலாக கடந்த சட்டமன்ற தேர்தலில் நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிட்டு வெற்றிப்பெற்ற ஜான்குமார், சில மாதங்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.  பின்னர் அவரது தொகுதியில் முதல்வர் நாராயணசாமி போட்டியிட்டு முறைப்படி எம்எல்ஏவாக தேர்வு பெற்றார்.  கடந்த எம்பி தேர்தலில் சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் காமராஜர் நகர் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தபோது,  நடந்த இடைத்தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு ஜான்குமார் எம்எல்ஏவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : supremo ,Congress MLA ,BJP ,party ,
× RELATED தேர்தல் பணிமனையில் பாஜவினர் மோதல்: பாஜ...