புதுடெல்லி: தமிழ்நாடு ஆளுநர் நடவடிக்கைக்கு எதிராக மாநில அரசு வழக்கு தொடர்ந்தது போன்றே கேரளா அரசு தரப்பிலும் அம்மாநில ஆளுநருக்கு எதிராக இரண்டு ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது. இதில் குறிப்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ரவிக்கு எதிராக மாநில அரசு தொடர்ந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் அதிரடியான ஒரு தீர்ப்பை வழங்கி இருந்தது. அதில், மாநில அரசுகளால் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்படும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர் ஆகியோர், மசோதா அனுப்பி வைக்கப்பட்ட அடுத்த மூன்று மாதங்களுக்குள் ஒப்புதல் வழங்க வேண்டும் என்றும், அதேப்போன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவியால் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்து இருந்த பத்து மசோதாக்களுக்கும் உச்ச நீதிமன்றம் தனது சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி ஒப்புதலும் வழங்கியிருந்தது.
இதையடுத்து தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட்ட உத்தரவு எங்களுக்கு பொருந்தும் எனக்கூறி, ஆளுநருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டு இருந்த வழக்கை கடந்த மாதம் 25ம் தேதி கேரளா அரசு திரும்பப்பெற்றது. அதற்கு உச்ச நீதிமன்றமும் அனுமதி வழங்கியது. இந்த நிலையில் கேரளா மாநிலத்தின் அப்துல் கலாம் பல்கலைக்கழகத்துக்கு தற்காலிக துணைவேந்தரை நியமித்த கேரள ஆளுநரின் ஆணையை ரத்து செய்த உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்த வழக்கு மற்றும் முனைவர் சிவப்பிரசாத் என்பவரை தற்காலிக துணை வேந்தராக மறுநியனம் செய்து ஆளுநர் பிறப்பித்த அறிவிப்பாணையை எதிர்த்து கேரள அரசு ஆகியோர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கானது முன்னதாக விசாரணைக்கு வந்தபோது, துணைவேந்தர் நியமனம் விவகாரம் தொடர்பாக இரு தரப்பும் பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும். குறிப்பாக துணைவேந்தரை ஆளுநர் தான் இறுதி செய்ய வேண்டும் என்று எங்கு எந்த விதியில் எழுதப்பட்டுள்ளது என்று காட்டமாக தெரிவித்த நீதிபதிகள், அப்துல் கலாம் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை நியமிப்பதற்கான பெயர்களை கேரள அரசு மற்றும் ஆளுநர் ஆகியோர் பரிந்துரை செய்யலாம் என்று கடந்த 13ம் தேதி உத்தரவிட்டிருந்தது.
மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் கே.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, துணைவேந்தை நியமனம் செய்யும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டதை அடிப்படையாக கொண்டு ஏதேனும் பரிந்துரைகளை மேற்கொண்டீர்களா என்று நீதிபதிகள் இருதரப்பினருக்கும் கேள்வியெழுப்பினர். அப்போது அதுகுறித்து ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறோம் என்று மனுதாரர்கள் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், கேரள மாநிலத்தில் அப்துல் கலாம் பல்கலைக்கழகம் உட்பட இரண்டுக்கு துனைவேந்தரை நியமனம் செய்யும் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சுதன்சு துலியா தலைமையிலான குழுவை அமைக்கப்படுகிறது. இந்த உத்தரவை அடிப்படையாக கொண்டு அந்த குழுவானது மூன்று மாதங்களில் விண்ணப்பங்கள் பெற்று நியமனத்தை முடிக்க வேண்டும். குறிப்பாக ஆளுநர் மற்றும் மாநில அரசு ஆகியோரின் மோதல் காரணமாக துணைவேந்தர் நியமனங்கள் நடைபெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது.
இதனை கருத்தில் கொண்டு தான் இந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் அரசு தரப்பில் வழங்கப்பட்ட பத்து உறுப்பினர்கள், ஆளுநர் தரப்பில் வழங்கப்பட்ட பெயர்களில் இருந்து தகுதியான நபர்களை தேடுதல் குழு தேர்வு செய்யும். இதில் குழு தலைவரான ஓய்வு நீதிபதி சுதான்சு துலியாவிடன், அதில் இடம்பெறும் உறுப்பினர்களை இரண்டு வாரத்தில் முடிவு செய்வார். அதன் பின்னர் அதுகுறித்த விளம்பரத்தை வெளியிட்டு நான்கு வாரத்துக்குள் விண்ணப்பங்கள் பெற வேண்டும். இதைத்தொடர்ந்து மூன்று மாதத்துக்குள் நியமனங்களை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
