×

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் வாக்கு திருட்டுக்கான புதிய ஆயுதம்: பெயர் நீக்கப்பட்டவர்களை சந்தித்து பேசிய ராகுல் காந்தி

அவுரங்காபாத்: தேர்தல் ஆணையம் மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்திற்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பீகாரில் 16 நாள் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’யை நேற்று முன்தினம் தொடங்கினார். சசாரத்தில் யாத்திரையை தொடங்கி வைத்த ராகுல் காந்தி, தீவிர திருத்த செயல்முறையால், கடந்த மக்களவை தேர்தலில் வாக்களித்து தற்போது வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டவர்களை சந்தித்து பேசினார்.

அந்த புகைப்படத்தை ராகுல் காந்தி நேற்று தனது வாட்ஸ்அப் சேனலில் பதிவிட்டு கூறியிருப்பதாவது: வாக்கு திருட்டுக்கான புதிய ஆயுதம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம். இந்த புகைப்படத்தில் என்னும் இருப்பவர்கள் இந்த திருட்டுக்கு வாழும் சான்றாக உள்ளனர். அவர்கள் அனைவரும் 2024 மக்களவை தேர்தலில் வாக்களித்துள்ளனர். ஆனால் தற்போது சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில், அவர்களின் அடையாளம், அவர்களின் இருப்பு, இந்திய ஜனநாயகத்தில் இருந்து அழிக்கப்பட்டுள்ளது. இவர்கள் எல்லாம் யார் என உங்களுக்கு தெரியுமா?

ராஜ் மோகன் சிங் (70) விவசாயி மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர், உம்ராவதி தேவி (35) தலித் மற்றும் தொழிலாளி, தஞ்சய் குமார் பிந்த் (30) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தொழிலாளி, சீதா தேவி (45) பெண் மற்றும் முன்னாள் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளி, ராஜு தேவி (55) பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் தொழிலாளி, முகமதுதீன் அன்சாரி (52) சிறுபான்மையினர் மற்றும் தொழிலாளி. பாஜ மற்றும் தேர்தல் ஆணையத்தின் கூட்டு, இவர்களை பகுஜன் மற்றும் ஏழைகளாக இருப்பதற்காக தண்டிக்கிறது.

இதில் நமது ராணுவ வீரர்களும் கூட தப்பவில்லை. இவர்களுக்கு இனி வாக்குரிமையோ, அடையாளமோ, உரிமைகளோ இருக்காது. சமூக பாகுபாடு மற்றும் பொருளாதார நிலை காரணமாக அவர்களால் அமைப்பின் சதித்திட்டத்தை எதிர்த்து போராட முடியவில்லை. ஒரு நபருக்கு ஒரு வாக்கு என்ற மிக அடிப்படையான உரிமையை பாதுகாக்க நாங்கள் அவர்களுக்கு துணை நிற்கிறோம்.
இது உரிமை, ஜனநாயகத்தின் அனைவரின் பங்கேற்பு பற்றிய கேள்வி. எந்த சூழலிலும் இதை முடிவுக்கு கொண்டு வர விட மாட்டோம் என்றார்.

* 2ம் நாள் யாத்திரையில் கோயிலில் வழிபாடு
வாக்காளர் அதிகார யாத்திரையின் 2ம் நாளான நேற்று ராகுல் காந்தி, ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் அவுரங்காபாத்தில் பயணம் மேற்கொண்டனர். இங்குள்ள தேவ்குண்ட் சூரிய கோயிலில் பிரார்த்தனை செய்து குடும்பாவிலிருந்து யாத்திரையை தொடங்கினார். நேற்று மாலை கயாவை வந்தடைந்தடைந்தனர்.

Tags : Rahul Gandhi ,Aurangabad ,Lok Sabha ,Bihar ,Election Commission ,Sasar ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்