புதுடெல்லி: மக்களவையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களை எழுப்பிடும் விதி எண் 377 இன் கீழ் திமுக எம்பி கனிமொழி எழுப்பிய கேள்வியில், ‘‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா , பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா உள்ளிட்ட ஒன்றிய அரசின் குறைந்தபட்சம் ஆறு திட்டங்களுக்கு ஒன்றிய அரசை விட தமிழ்நாடு மாநில அரசு கணிசமான அதிக நிதிப் பங்களிப்பை வழங்குகிறது. இதை அதிகாரப்பூர்வ தரவுகள் வெளிப்படுத்துகின்றன. பி.எம்.ஏ.ஒய் திட்டத்தின் கீழ், ஒரு வீட்டிற்கு ரூ. 2,83,900 ஒதுக்கப்படுகிறது. இந்த செலவில் 61சதவீத நிதியை தமிழ்நாடு அரசே ஏற்கிறது.
பிரதமர் பெயரிலான இத்திட்டத்துக்கு ஒன்றிய அரசு 39சதவீத செலவை மட்டுமே பங்களிக்கிறது.இன்னும் கவலையளிக்கும் வகையில், பி.எம்.எம்.எஸ்.ஒய் திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் பங்கு 27சதவீதம் தான். ஆனால் இத்திட்டத்தின் 73சதவீதம் செலவுகளை தமிழ்நாடு அரசு ஏற்கிறது. இதுபோன்ற திட்டங்களில் ஒன்றிய-மாநில அரசுகளின் பங்களிப்பு என்பது 60,40 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும் என்ற அடிப்படை கொள்கையையே இது முற்றிலுமாக மாற்றிவிட்டது. மேலும் இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதியத் திட்டத்தில் பயனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு ஆயிரம் ரூபாயும், ஒன்றிய அரசு ரூ.200மும் கொடுக்கின்றன. இத்திட்டத்தில் தமிழ்நாடு அரசின் பங்கு 83சதவீதமாக உள்ளது. ஜல் ஜீவன் திட்டத்துக்கு ஒன்றிய-மாநில அரசுகளின் நிதிப் பங்கு 50:50 என்ற விகிதத்தில் தான் இருக்க வேண்டும்.
ஆனால் தமிழ்நாடு மாநில அரசு ஜல் ஜீவன் திட்டத்துக்கு 55சதவீதம் பங்களிக்கிறது. பிரதமரின் பெயரைக் கொண்ட இந்தத் திட்டங்கள் ஒன்றிய அரசின் திட்டங்களாக விளம்பரப்படுத்தப்பட்டாலும், அவற்றின் பாதிக்கும் மேற்பட்ட நிதியை தமிழ்நாடு அரசே அளிக்கிறது. இது நிதிக் கூட்டாட்சிக்கு எதிரானது. கொள்கை ரீதியாக ஒப்புக் கொண்ட நிதி ஒதுக்கீட்டு நெறிகளை ஒன்றிய அரசு மீறுகிற வகையில் இருக்கிறது. எனவே ஒன்றிய அரசு நிதியளிக்கும் திட்டங்களுக்கான நிதி ஏற்பாடுகளை உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட செலவுப் பகிர்வு அறிவுரைகளைப் பின்பற்றுவதை உறுதிசெய்து, ஒன்றிய அரசின் நிதிப் பங்களிப்பை அதிகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
