×

10 நாட்கள் நடைபெறும் பிள்ளையார்பட்டி சதுர்த்தி பெருவிழா கொடியேற்றம்: ஆக.23ல் சூரசம்ஹாரம், 26ல் தேரோட்டம்

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில் சதுர்த்தி பெருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. வருகிற ஆக.26ல் தேரோட்டம் நடைபெற உள்ளது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே, பிள்ளையார்பட்டியில் பிரசித்தி பெற்ற கற்பகவிநாயகர், மருதீசர் உடனுறை வாடாமலர் மங்கை, திருவீசர் உடனுறை சிவகாமி அம்மன் கோயில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்திப் பெருவிழா 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா வரும் ஆக.27ம் தேதி கொண்டாடப்படவுள்ளது.

இதனை முன்னிட்டு பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் இன்று காலை கொடியேற்றம் நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. மூலவர் தங்க கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர் வடக்கு நோக்கி உள்ள கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது. இதையடுத்து கொடி மரத்திற்கு முன்னர் அங்குசத்தேவருக்கு பால், சந்தனம், மஞ்சள், தயிர், பன்னீர் உள்ளிட்ட 16 விதமான திரவியங்களால் சிறப்பு அபிஷேக, தீபாராதனை நடந்தது. அதனை தொடர்ந்து 50க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் வேத மந்திரங்கள் ஓதினர். அதனை தொடர்ந்து கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது.

பின்னர் உற்சவ விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு மூஷிக வாகனத்தில் கற்பக விநாயகர் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். நாளை 2ம் நாள் முதல் 8ம் நாள் வரை தினந்தோறும் காலையில் சுவாமி வெள்ளி கேடகத்தில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். இரவில் சிம்மம், பூதம், கமலம், ரிஷபம், மயில், குதிரை வாகனங்களில் சுவாமி எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும்.

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான கஜமுக சூரசம்காரம் 6ம் நாள் (ஆக.23ல்) மாலை 4.30 மணியளவில் நடைபெறும். தேரோட்டம் 9ம் நாள் (ஆக.26) மாலை 4 மணி அளவில் நடைபெறும். அன்று இரவு மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார். தொடர்ந்து சுவாமி யானை வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். 10ம் நாள் ஆக.27ம் தேதி காலை கோயில் குளத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெறும். மதியம் உச்சிகால பூஜையில் மூலவருக்கு ராட்சத கொழுக்கட்டை படைக்கப்பட்டு சிறப்பு தீபாரதனை நடைபெறும். அன்று இரவு பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலர்கள் காரைக்குடி சித.பழனியப்பச் செட்டியார், நச்சாந்துபட்டி மு.குமரப்பச் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.

Tags : Pillaiyarpatti Chaturthi festival ,Tiruputtur ,Pillaiyarpatti Karpakavinayagar Temple Chaturthi festival ,Karpakavinayagar temple ,Pillaiyarpatti ,Sivaganga district ,Marudeesar Udanurai Vadamalar Mangai ,Thiruveesar ,Udanurai Sivagami… ,
× RELATED வேலூர் பொற்கோயிலில் ஜனாதிபதி சுவாமி தரிசனம்