×

டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக 50 இடங்களில் விவசாயிகள், திமுக, தோழமை கட்சிகள் மறியல்

தஞ்சை, டிச. 9: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகள், திமுக மற்றும் தோழமை கட்சிகள் சார்பில் 50 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 3,025 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டம் முழுவதும் 40,000 கடைகள் அடைக்கப்பட்டிருந்ததால் சாலைகள் வெறிச்சோடியது. புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக நேற்று நடத்தப்பட்ட பந்த்தால் தஞ்சை மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் நடந்த சாலை மறியல் போராட்டத்தில் அனைத்து கட்சி, விவசாய சங்கங்கள், இயக்கங்களை சேர்ந்தோர் பங்கேற்றனர். இதில் மாவட்டம் முழுவதும் 3,025 பேர் கைது செய்யப்பட்டனர். மாவட்டத்தில் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. தஞ்சை மாநகரில் காந்திஜி ரோடு, கீழவாசல், தெற்கலங்கம், தெற்குவீதி, புதிய பேருந்து நிலையம், மருத்துவக்கல்லூரி சாலை, ரயிலடி உள்ளிட்ட முக்கிய பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. பேருந்துகள் இயக்கம் குறைந்தளவே இருந்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை முன் அனைத்து கட்சிகள் சார்பில் நடந்த மறியல் போராட்டத்துக்கு திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரை.சந்திரசேகரன் தலைமை வகித்தார். தஞ்சை எம்எல்ஏ நீலமேகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் நீலமேகம், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட துணை செயலாளர் கல்யாணசுந்தரம், மதிமுக மாவட்ட செயலாளர் உதயகுமார், விடுதலை சிறுத்தைகள் மாவட்ட செயலாளர் சொக்காரவி, திக மாவட்ட தலைவர் அமர்சிங், பொது செயலாளர் ஜெயக்குமார், இந்திய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் சிமியோன் சேவியர்ராஜ், ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் சாமி.நடராஜன், மாவட்ட செயலாளர் கண்ணன், சிஐடியூ மாவட்ட செயலாளர் ஜெயபால், மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன் உட்பட 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில் திருவையாறு எம்எல்ஏ துரை.சந்திரசேகரன், தஞ்சை எம்எல்ஏ நீலமேகம் உட்பட 250 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சை ஆத்துப்பாலம் அருகே தமிழ்த்தேசிய பேரியக்க தலைவர் மணியரசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 60 பேர், தஞ்சை பழைய பேருந்து நிலையம் முன் தெற்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அன்பரசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 20 பேர், தஞ்சை புதிய பேருந்து நிலையம் முன் திக மாநில அமைப்பு செயலாளர் குணசேகரன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 25 பேர் கைது செய்யப்பட்டனர். கும்பகோணம்: கும்பகோணம் தலைமை அஞ்சலகம் முன் மாவட்ட காவிரி பாசன விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மாவட்ட செயலாளர் விமல்நாதன் தலைமையில் மறியல் போராட்டம் நடத்தினர். கும்பகோணம் கோர்ட் வளாகம் முன் சங்க தலைவர் லோகநாதன் தலைமையில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கும்பகோணம் பஸ்ஸ்டாண்டில் நடந்த மறியல் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னை பாண்டியன் தலைமையில் திரளானோர் பங்கேற்றனர். புளியஞ்சேரியில் வாலிபர் சங்கத்தினர் மாவட்ட பொருளாளர் ராமன் தலைமையில் பிரதமர் மோடி கொடும்பாவியை எரித்து மறியல் போராட்டம் நடத்தினர். பந்தநல்லூரில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருவையாறு: திருவையாறு கடைவீதியில் வடக்கு திமுக ஒன்றிய, நகரம் சார்பில் சாலை மறியல் நடந்தது. தலைமை செயற்குழு உறுப்பினர் நாகராஜன், ஒன்றிய செயலாளர் சிவசங்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர். திருவையாறு தெற்கு ஒன்றியம் சார்பில் கண்டியூர் கடைவீதியில் ஒன்றிய செயலாளர் கவுதமன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 150 பேர் கைது செய்யப்பட்டனர். அம்மன்பேட்டையில் தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளர் முரசொலி தலைமையில் மறியலில் ஈடுபட்ட 100 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளி காந்தி சிலை அருகே பூதலூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு தலைமையில் மறியலில் ஈடுபட்ட 75 பேர் கைது செய்யப்பட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பூதலூர் வடக்கு ஒன்றிய செயலாளர் காந்தி, விவசாய சங்கம் சிவசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். பூதலூர் நால்ரோட்டில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 66 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாபநாசம்: பாபநாசத்தில் திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மறியல் போராட்டம் நடத்தினர். திமுக பேரூர் செயலர் கபிலன், விசி மாவட்ட பொருளாளர் உறவழகன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலர் செல்லத்துரை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலர் காதர் உசேன் உள்ளிட்ட 72 பேர் கைது செய்யப்பட்டனர். மாத்தூரில் சிபிஎம் சார்பில் மறியலில் ஈடுபட்ட 23 பேர் கைது செய்யப்பட்டனர். அம்மாப்பேட்டையில் மறியலில் ஈடுபட்ட பல்வேறு கட்சியினர் 140 பேர் மற்றும் கோயிலூர், மெலட்டூர், நாகலூரில் மறியலில் ஈடுபட்ட 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டையில் தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமையில் பல்வேறு கட்சியினர் மற்றும் விவசாயிகள், வணிகர்கள் என 1,000க்கும் மேற்பட்டோர் மணிக்கூண்டு பகுதியிலிருந்து பேரணியாக புறப்பட்டு 4 கி.மீ தூரம் சுற்றி வந்து பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகில் மறியல் போராட்டம் நடத்தினர். பேரணியில் சிலர் மண்வெட்டிகளை ஏந்தியபடி வந்தனர். பேரணியில் பட்டுக்கோட்டை நகர திமுக பொறுப்பாளர் செந்தில்குமார், ஒன்றிய செயலாளர்கள் வடக்கு பார்த்திபன், கிழக்கு முருகானந்தம், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மகேந்திரன்.

சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, விசி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் இளந்தென்றல், மக்கள் நீதி மைய தென்கிழக்கு மாவட்ட செயலாளர் சதாசிவம், தமிழக மக்கள் புரட்சி கழக பொது செயலாளர் முருகையன், மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொது செயலாளர் சிவா, முத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதைதொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். இதேபோல் மதுக்கூர் பேருந்து நிலையத்திலிருந்து திமுக, காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பேரணியாக வந்து முக்கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

பேராவூரணி: பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து 400க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்று பெரியார் சிலை அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் பங்கேற்ற காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சிங்காரம் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதிராம்பட்டினம்: அதிராம்பட்டினத்தில் திமுக பேரூர் செயலாளர் இராம.குணசேகரன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற பல்வேறு கட்சிகளை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். அதிராம்பட்டினம் பேருந்து நிலையம், பழைய அஞ்சலக சாலை, ஆஸ்பத்திரி சாலை, பெரிய கடைத்தெரு, பட்டுக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

Tags : DMK ,comrades ,places ,Delhi ,
× RELATED கமுதியில் திமுக அலுவலகம் திறப்பு