×

ராகுல் காந்தி வெளிப்படுத்திய வாக்கு திருட்டு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பேரணி, கையெழுத்து இயக்கம் நடத்தப்படும்: காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை பேட்டி

சென்னை: ராகுல் காந்தி வெளிப்படுத்திய வாக்கு திருட்டு தொடர்பாக தமிழகம் முழுவதும் பேரணி, கையெழுத்து இயக்கம் நடத்தப்படும் என்று காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அறிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் கூட்டம் சென்னை சத்திய மூர்த்தி பவனில் நேற்று நடந்தது.

கூட்டத்திற்கு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார். கூட்டத்தில் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் எஸ்.ராஜேஷ்குமார், முன்னாள் தலைவர்கள் ேக.வி.தங்கபாலு, கிருஷ்ணசாமி, விஷ்ணு பிரசாத் எம்பி, எம்எல்ஏக்கள் ரூபி மனோகரன், பிரின்ஸ், துரை சந்திரசேகர், துணை தலைவர் சொர்ணா சேதுராமன், பொதுச்செயலாளர்கள் தளபதி பாஸ்கர், பி.வி.தமிழ்செல்வன் மற்றும் எம்.எஸ்.திரவியம், வழக்கறிஞர் முத்தழகன், சிவ ராஜசேகரன் உள்ளிட்ட அனைத்து மாவட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்ர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சூரஜ் எம்.என்.ஹெக்டே ஆகியோர் பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர். மேலும் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கிராம கமிட்டிகளின் செயல்பாடு, வருகிற சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விஷயம் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதன் பிறகு காங்கிரஸ் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எம்பி, எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை அளித்த பேட்டி: உலகத்தில் இல்லாத அளவுக்கு மோடி அரசு தேர்தல் ஆணையத்துடன் சேர்ந்து வாக்குகளை திருடி இருக்கிறார்கள். வாக்குத்திருட்டு தொடர்பாக மாவட்ட அளவிலான பேரணி நடத்த உள்ளோம். கையெழுத்து இயக்கமும் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கோடி கையெழுத்து வாங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அனைவருக்கும் நியாயத்தை பேசினால், மக்களுக்காக போராடினால் அரசு இயந்திரத்தோடு சேர்ந்து அவர்களை நசுக்குவது, பேசவிடாமல் வாய் பூட்டு போடுவது போன்ற நடவடிக்கையில் பாஜ மோடி அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. அதை வன்மையாக கண்டித்து தீர்மானம் போடப்பட்டுள்ளது. மாவட்ட வாரியாக தமிழகத்திலும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு செய்ய வேண்டும். தேர்தல் ஆணையம் கண்டிப்பாக நியாயமாக தேர்தலை நடத்த மாட்டார்கள். மக்கள் சக்திதான் செயல்படுத்த வேண்டும்.

எல்.முருகனுக்கு பேச்சுரிமை, வாக்குரிமை வாங்கி கொடுத்தது காங்கிரஸ் தான். காங்கிரஸ் இல்லாமல் முருகனும் இல்லை, மோடியும் இல்லை. எல்லா அதிகாரத்தையும் நாங்கள் தான் பெற்று கொடுத்தோம். திருமாவளவன் தவறான இடத்தில் சேர்ந்திருக்கிறார். பாவ மூட்டைகளை சுமக்க வேண்டாம் என்று எல்.முருகன் பேசியிருக்கிறார். முதலில் கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சிகள் வந்தால் சிவப்பு கம்பள வரவேற்பு அளிப்போம் என்றார்கள்.

அவர்கள் அதை ரத்தக் கம்பளம் என்று சொன்னதும். உடனடியாக கம்யூனிஸ்ட் அடிமை கட்சி, தேய்ந்து விட்டது என்றார்கள். அவர்கள் அழைத்து நாங்கள் சென்றால் நல்ல கட்சி என்பார்கள். சுயமரியாதோடு கூட்டணியில் இருந்தால் அது தேய்ந்து போன கட்சி என்பார்கள். திமுக, காங்கிரசிலிருந்து முக்கிய தலைவர்கள் பாஜவில் இணைய போகிறார்கள் என்று எல். முருகன் பகல் கனவு காண்கிறார். அவர் கனவு எல்லாம் பலிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags : and signature ,Tamil Nadu ,Rahul Gandhi ,Congress ,president ,Selva Berundakhai ,Chennai ,Selva Berundaga ,Sathya Murthy Bhavan ,
× RELATED நெல்லை மருத்துவக் கல்லூரி...