×

தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன்: பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாஜ நாடாளுமன்ற குழு கூட்டத்தில் முடிவு

புதுடெல்லி: பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதமர் மோடி தலைமையில் நடந்த பாஜ நாடாளுமன்ற குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர் கடந்த மாதம் 21ம் தேதி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்தார். உடல் நலக் குறைவு காரணமாக உடனடியாக பதவியிலிருந்து விலகுவதாக அவரது ராஜினாமா கடிதத்தில் கூறியிருந்தார்.

இதனை ஜனாதிபதி முர்மு உடனடியாக ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து, 17வது துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான நடைமுறைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது. தேர்தல் தேதி கடந்த 7ம் தேதி அறிவிக்கப்பட்டன. அதன்படி, புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 9ம் தேதி நடக்க உள்ளது. இதற்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி வரும் 21ம் தேதி. வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான அவகாசம் முடிய 4 நாட்களே உள்ள நிலையில், துணை ஜனாதிபதி வேட்பாளரை தேர்வு செய்ய பாஜ நாடாளுமன்ற குழு கூட்டம் டெல்லியில் நேற்று மாலை நடந்தது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, ஒன்றிய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், சர்பானந்தா சோனோவால் உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஜெகதீப் தன்கர் துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு முன்பாக மேற்கு வங்க மாநில ஆளுநராக இருந்தார். எனவே புதிய துணை ஜனாதிபதி வேட்பாளரும் ஏதேனும் ஒரு மாநில ஆளுநராகவே இருப்பார் என பாஜ தரப்பில் செய்திகள் கசிந்தன. மேலும் துணை ஜனாதிபதிதான் மாநிலங்களவை தலைவர் ஆவார்.

மக்களவையில் அசுர பலத்துடன் இருக்கும் பாஜ, மாநிலங்களவையில் கூட்டணி மற்றும் ஆதரவு கட்சிகளின் தயவில் தான் மசோதாக்களை நிறைவேற்ற வேண்டி உள்ளது. இதனால் மாநிலங்களவை தலைவர் தங்களுக்கு நம்பிக்கையான நபராக இருக்க வேண்டுமென்பதற்காக துணை ஜனாதிபதி வேட்பாளர் தேர்வு குறித்து பிரதமர் மோடியும், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தீவிர ஆலோசனைகள் மேற்கொண்டனர்.

இந்தநிலையில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த பாஜ நாடாளுமன்ற குழு கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழ்நாட்டை சேர்ந்தவரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு செய்யப்பட்டார். இதற்கான அறிவிப்பை வெளியிட்ட பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சி.பி.ராதாகிருஷ்ணனை எதிர்க்கட்சிகளும் ஆதரிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். தமிழ்நாட்டு பாஜ தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.

கடந்த 2004 முதல் 2007ம் ஆண்டு வரை தமிழ்நாடு பாஜக தலைவராக இருந்து கட்சியை வளர்த்த அவர், 1998, 1999 என 2 முறை கோவை தொகுதியில் இருந்து மக்களவை எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்த இவர், 2016 முதல் 2019 வரை தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்தார். ஜார்க்கண்ட், புதுச்சேரி, தெலங்கானா என ஒரே நேரத்தில் 3 மாநில ஆளுநர் பொறுப்பை கவனித்த அவர், கடந்த ஆண்டு மகாராஷ்டிரா ஆளுநராக பொறுப்பேற்றார்.

இவரை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்வு செய்திருப்பது, தென் மாநிலங்களில் பாஜவை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணனை துணை ஜனாதிபதி வேட்பாளராக பாஜ களமிறக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி சார்பாக பொது வேட்பாளரை நிறுத்துவதற்காக இன்று ஆலோசனை நடத்த உள்ளது.

* தமிழ்நாட்டில் இருந்து 3வது துணை ஜனாதிபதி
தமிழ்நாட்டில் இருந்து துணை ஜனாதிபதி பதவியை ஏற்கும் 3வது தலைவர் என்ற பெருமையை சி.பி.ராதாகிருஷ்ணன் பெற உள்ளார். இதற்கு முன், நாட்டின் முதல் துணை ஜனாதிபதியான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கடந்த 1952 முதல் 1962 வரை 10 ஆண்டுகள் (2 முறை) பதவி வகித்துள்ளார். அதன் பிறகு, ஆர்.வெங்கடராமன் கடந்த 1984 முதல் 1987 வரை துணை ஜனாதிபதியாக இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து, சி.பி.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டில் இருந்து 3வது துணை ஜனாதிபதியாக உள்ளார். இவர் அடுத்த 5 ஆண்டுகள் பதவி வகிப்பார்.

* வெற்றி நிச்சயம்
துணை ஜனாதிபதி தேர்தலில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்கள் வாக்களிப்பார்கள். மக்களவை, மாநிலங்களவை சேர்த்து தற்போது 786 உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் தேர்தலில் வாக்களிக்கும் பட்சத்தில், வேட்பாளர் ஒருவர் வெற்றி பெற 394 வாக்குகள் தேவை. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மக்களவையில் 293 எம்பிக்களும், மாநிலங்களவையில் 129 எம்பிக்களும் உள்ளனர். மொத்தம் 422 ஓட்டுகள் இருப்பதால் சி.பி.ராதாகிருஷ்ணனின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

* மகிழ்ச்சி: பிரதமர் மோடி எக்ஸ் தள பதிவு
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், ‘‘சி.பி.ராதாகிருஷ்ணன் நீண்ட கால பொது வாழ்க்கையில் தனது அர்ப்பணிப்பு, பணிவு மற்றும் அறிவுத்திறன் மூலம் தன்னை தனித்துக் காட்டிக் கொண்டவர். அவர் வகித்த பல்வேறு பதவிகளில் எப்போதும் சமூக சேவை மற்றும் ஒதுக்கப்பட்டவர்களுக்கு உரிமைகள் பெற்றுத் தருவதில் கவனம் செலுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் வலுவான அடித்தளத்திற்காக விரிவான பணிகளை செய்தவர். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ய முடிவு செய்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்’’ என கூறி உள்ளார்.

* கடைசி மூச்சு வரை நாட்டிற்காக உழைப்பேன்
சி.பி.ராதாகிருஷ்ணன் நேற்று தனது எக்ஸ் பதிவில், ‘‘என்னை துணை ஜனாதிபதி வேட்பாளராக தேர்ந்தெடுத்ததற்காக பிரதமர் மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் கட்சியின் நாடாளுமன்ற குழு உறுப்பினர்கள் , கூட்டணி கட்சி தலைவர்கள் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்காகவும், தேசத்திற்கு சேவை செய்ய எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட நெகிழ்ச்சியடைந்தேன். என் கடைசி மூச்சு வரையிலும் தேசத்திற்காக கடினமாக உழைப்பேன் என்று உறுதியளிக்கிறேன்’’ என கூறி உள்ளார்.

* அன்றே சொன்னது தினகரன்

துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தனது பதவியை ராஜினாமா செய்த சில நாட்களிலேயே (ஜூலை 24) துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணனின் பெயரை பாஜ மேலிடம் பரிசீலிப்பதாக தினகரன் நாளேட்டில் செய்தி வெளியானது. இன்று வரை வேறு எந்த நாளிதழும் சி.பி.ராதாகிருஷ்ணன் துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக செய்தி வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

துணை ஜனாதிபதி பதவிக்கு பல பாஜ தலைவர்களின் பெயர் இடம் பெற்றிருந்தாலும், பிரதமர் மோடி சி.பி.ராதாகிருஷ்ணனின் பெயரை தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் இளம் வயது முதல் தொடர்புடையவர் சி.பி.ராதாகிருஷ்ணன். கடந்த மக்களவை தேர்தலின் போது, தமிழ்நாட்டில் இருந்து 10 மக்களவை தொகுதிகளில் பாஜ வெற்றி பெறும் என்று அண்ணாமலை கட்சியின் தேசிய தலைமைக்கு அறிக்கை கொடுத்திருந்தார். தென் மாநிலங்களில் இருந்து அதிக சீட்டுகளை பெற முடியும் என்றும் ஒன்றிய உளவுத்துறையும் அறிக்கை கொடுத்தது.

தமிழ்நாட்டில் 10 சீட் உறுதி என்பதால், கூட்டணிக்காக டெல்லியில் முகாமிட்ட தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவை சந்திக்க பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மறுத்துவிட்டனர். அப்போது, தென் மாநிலங்களில் இருந்து பாஜவுக்கு சீட்டுகள் குறைவாகவே கிடைக்கும். தமிழ்நாடு, ஆந்திராவில் இருந்து ஒரு சீட் கூட கிடைக்காது என்று பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியிருந்தார். இதையடுத்து, ஆந்திரா மாநிலத்தில் தெலுங்கு தேசம் மற்றும் பாஜ கூட்டணி அமைய காரணமாக இருந்தார்.

சி.பி.ராதாகிருஷ்ணன் கூறியபடி தமிழ்நாட்டில் இருந்து பாஜவுக்கு ஒரு சீட் கூட கிடைக்கவில்லை. அத்தோடு, கர்நாடகாவிலும் சீட்கள் எண்ணிக்கை குறைந்தது. தெலங்கானாவிலும் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. இதைதொடர்ந்து தென் மாநில அரசியலில் சி.பி.ராதாகிருஷ்ணனின் ஆலோசனையின்றி பாஜ தலைமை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால் தமிழக மாநில தலைவர் மாற்றத்தின்போது சி.பி.ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரான நயினார் நாகேந்திரனுக்கு பதவி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags : National Democratic Alliance ,Vice Presidential ,C.P. Radhakrishnan ,BJP ,Parliamentary Party ,Modi ,New Delhi ,Tamil Nadu ,Maharashtra ,Governor ,Presidential ,Parliamentary ,Party ,Presidential… ,
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்...