×

இலங்கை சிறைபிடித்தவர்களை விடுவிக்க கோரி திட்டமிட்டபடி மீனவர்கள் நாளை ரயில் மறியல் போராட்டம்: ராமநாதபுரம் மீனவர் சங்கத்தினர் அறிவிப்பு

 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடிப்பதும், அத்துமீறி கைது செய்வதும், படகுகளை பறிமுதல் செய்வதும் தொடர்கிறது. கடந்த 2 மாதங்களில் தமிழக மீனவர்கள் 64 பேர் கைது செய்யப்பட்டு இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 24 மீனவர்கள் மீது, 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறைகளில் உள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுதலை செய்யக்கோரியும், பறிமுதல் செய்த படகுககளை விடுவிக்க வலியுறுத்தியும், கடந்த திங்கள்கிழமை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 15ம் தேதி தங்கச்சிமடத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளை (ஆக. 19) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் மீனவ சங்க பிரதிநிதிகளிடம் நேற்று முன்தினம் மாலை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் எஸ்பி சந்தீஷ் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள், மீனவ சங்கங்களின் தலைவர்கள் ஜேசு, எமரிட், ஜஸ்டின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இரவு வரை தொடர்ந்த இந்த பேச்சுவார்த்தையின் போது, இலங்கை சிறைகளில் உள்ள மீனவர்களை விடுவிக்க எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை எனக் கூறி கூட்டத்தை விட்டு மீனவர்கள் வெளியேறினர். இதனால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதுகுறித்து ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் எமரிட் செய்தியாளர்களிடம் நேற்று கூறுகையில், ‘‘திட்டமிட்டபடி 19ம் தேதி (நாளை) ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம். ஒன்றிய அரசு மீனவர்களை வைத்து அரசியல் செய்கிறது. மீனவர்களை விடுவித்தால் மாநில அரசுக்கு பெயர் கிடைத்துவிடும் என ஒன்றிய அரசு செயல்படுவது கண்டிக்கத்தக்கது. தற்போதுள்ள ஒன்றிய அரசு ஆட்சிக்கு வந்தது முதல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கைதாகி விடுதலையாகியுள்ளனர். ஏராளமான படகுகளை இலங்கை அரசு கைப்பற்றி வைத்துள்ளது. எங்களை பாதுகாக்க வேண்டிய ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் கூட்டு சேர்ந்து எங்களை அழித்துக் கொண்டிருக்கிறது’’ என தெரிவித்தார்.

 

Tags : Ramanathapuram Fishermen's Association ,Ramanathapuram ,Sri Lankan Navy ,Ramanathapuram district ,Sri Lanka ,
× RELATED விஜய் தற்போது முன்னாள் நடிகர் நாங்கள்...