×

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஜனாதிபதி, ஆளுநருக்கு வழங்கிய காலக்கெடு சரியானது: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல்

புதுடெல்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரத்தில் ஜனாதிபதி, ஆளுநருக்கு வழங்கிய காலக்கெடு சரியானது என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரம் மற்றும் துணைவேந்தர் நியமனம் ஆகியவை தொடர்பான விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த மூன்று வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆளுநர் கிடப்பில் போட்டு வைத்தும், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தும் இருந்த பத்து மசோதாக்களுக்கு சட்டப்பிரிவு 142ஐ பயன்படுத்தி கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி ஒப்புதல் வழங்கி தீர்ப்பளித்தது.

குறிப்பாக தமிழ்நாட்டை போன்றே மசோதா விவகாரத்தில் ஆளுநர்களின் நடவடிக்கைக்கு எதிராக பஞ்சாப், கேரளா மற்றும் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்கள் தொடந்துள்ள வழக்குகள் தற்போது வரையில் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஆளுநர்களுக்கும், ஜனாதிபதிக்கும் உச்ச நீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயிக்க முடியுமா என்று உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு, சுமார் 14 கேள்விகளுக்கு ஜனாதிபதி திரெளபதி முர்மு விளக்கம் கேட்டு கடிதம் எழுதி அனுப்பியதை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு, இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் பிறப்பித்து கடந்த மாதம் 22ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் பி.வில்சன் மற்றும் ஹரீஷ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துப்பூர்வ வாதங்களை நேற்று தாக்கல் செய்துள்ளனர். அதில், “இந்த விவகாரத்தில் முன்னதாக தமிழ்நாடு ஆளுநர் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கால நிர்ணயம் செய்தது தொடர்பாக விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதியின் இந்த விளக்கக் குறிப்பு கோரிய மனுவை விசாரிக்க தேவையில்லை. மேலும் ஜனாதிபதியின் விளக்க குறிப்பு, ஏற்கனவே முடிவு செய்யப்பட்ட சட்டத்தை சீர்குலைத்து, உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட முடிவுகளை மீறுவதற்காக மாறுவேடத்தில் செய்யப்பட்ட மேல்முறையீடு ஆகும்.

குறிப்பாக ஜனாதிபதி மூலமான விளக்கம் கோரியது என்பது, மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு உச்ச நீதிமன்றம் கால அளவு நிர்ணயித்து வழங்கிய தீர்ப்பை நீர்த்துபோக செய்யும். மேலும் உச்ச நீதிமன்றத்தின் உட்சபட்ச சிறப்பு அதிகாரமான அரசியல் சாசன பிரிவு 142ஐ இந்த விவகாரத்தில் பயன்படுத்தி தான் முந்தைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கூட்டாட்சி மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பத்துக்கு இடம் கிடையாது. அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவையின் ஆலோசனையின் படி தான் ஆளுநர் செயல்பட முடியும்.

எனவே இந்த விவகாரத்தில் ஜனாதிபதி மற்றும் ஆளுநர் மூன்று மாதங்களில் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய காலக்கெடு என்பது சரியான ஒன்றாகும். குறிப்பாக அரசியல் சாசன பிரிவு 141 பயன்படுத்தி இறுதி செய்யப்பட்ட ஒரு ஒரு விவகாரத்தை மறுசீராய்வு அல்லது ஜனாதிபதி விளக்கம் என்ற அடிப்படையில் மீண்டும் அந்த அந்த முடிவை மாற்ற முடியாது. கடந்த காலங்களில் காவிரி நீர் பங்கீடு தொடர்பான விவகாரத்தில் இதேப்போன்று கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அதனை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த விவகாரம் இயற்கை நீதியை மீறுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற தீர்மானத்துக்கு மாறானதாகும். இந்த விவகாரத்தில் அரசியல் சாசன விவாதங்களின் போது மிகத்தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதி அனுப்பும் அனைத்து விளக்க குறிப்புக்களும் உச்ச நீதிமன்றம் பதிலளிக்க வேண்டியது இல்லை என்பது தெளிவாகியுள்ளது. குறிப்பாக அரசியல் காரணங்களுக்காக எழுப்பப்படும் இதுபோன்ற கேள்விகளுக்கு உச்ச நீதிமன்றம் பதிலளிப்பதை தவிர்த்து விட்டு, அதனை நிராகரிக்க அதிகாரம் உள்ளது.

தற்போது ஜனாதிபதி விளக்க குறிப்பு என்ற பெயரில் உள்ள இந்த மனுவை அனுமதித்தால், அது அரசியல் சாசன பிரிவு 141ன் சட்ட பிரிவை நீர்த்துப்போக செய்யும் வகையில் அமைந்துவிடும். அதேப்போன்று நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாட்டுக்கு முட்டுக்கட்டையாக அமைந்து விடும் என்பதிலும் சந்தேகமில்லை. எனவே இதை அனைத்தையும் கருத்தில் கொண்டு ஜனாதிபதி விளக்கம் கூறிய அந்த மனுவுக்கு பதிலளிக்க முடியாது. ஏனெனில் அதனை அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்க முடியாது என்று கூறி திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசின் முக்கிய வாதம்
* ஜனாதிபதியின் விளக்கக் குறிப்பு கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் விசாரிக்க தேவையில்லை.
* கூட்டாட்சி மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடிப்படையில் ஆளுநரின் தனிப்பட்ட விருப்பத்துக்கு இடம் கிடையாது.
* அரசியல் சாசன பிரிவு 141 பயன்படுத்தி இறுதி செய்யப்பட்ட ஒரு ஒரு விவகாரத்தை மறுசீராய்வு அல்லது ஜனாதிபதி விளக்கம் என்ற அடிப்படையில் மீண்டும் அந்த அந்த முடிவை மாற்ற முடியாது.
* ஜனாதிபதி அனுப்பும் அனைத்து விளக்க குறிப்புக்களும் உச்ச நீதிமன்றம் பதிலளிக்க வேண்டியது இல்லை. அதனை நிராகரிக்க அதிகாரம் உள்ளது.
* அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்க முடியாதது என்று கூறி திருப்பி அனுப்பி வைக்க வேண்டும்’.

Tags : Tamil Nadu government ,Supreme Court ,New Delhi ,Tamil Nadu Assembly ,
× RELATED மாநில அரசின் வேலை உறுதி திட்டத்திற்கு...