×

2 அடுக்கு விகிதங்களுடன் ஜிஎஸ்டி 2.0 வளர்ச்சியை அடக்கும் வரியாக இருக்க கூடாது: காங். வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘சீர்த்திருத்தம் செய்யப்படும் ஜிஎஸ்டி 2.0 நல்ல, எளிமையான வரியாக இருக்க வேண்டுமே தவிர வளர்ச்சியை அடக்கும் வரியாக இருக்கக் கூடாது’ என காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. கடந்த 2017ல் அமல்படுத்தப்பட்ட நாடு முழுவதும் ஒரே வரியை விதிக்கும் ஜிஎஸ்டியை 4 அடுக்கு விகிதத்திற்கு பதிலாக 5%, 18% என 2 அடுக்கு விகிதமாக சீர்த்திருத்தம் செய்ய ஒன்றிய நிதி அமைச்சகம் முன்மொழிந்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில், மாற்றப்பட்ட ஜிஎஸ்டி 2.0 முக்கிய வாக்குறுதியாக இடம் பெற்றிருந்தது. முற்றிலும் மாற்றப்பட்ட ஜிஎஸ்டி 2.0வை கொண்டு வர காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. இந்த மாற்றம் நிகழ்ந்து, தனியார் நுகர்வு, தனியார் முதலீட்டை அதிகரிக்கும் வரை பொருளாதார வளர்ச்சி வேகமடையாது என்ற உண்மையை பிரதமர் மோடி இறுதியாக உணர்ந்து விட்டதாக இப்போது தெரிகிறது. கடந்த 7 ஆண்டுகளில் அதிகரித்த விகிதங்கள், பல விலக்குகள் மூலம் ஜிஎஸ்டியின் நோக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.

எனவே வரி விகித எண்ணிக்கையில் கடுமையான குறைப்பு இருக்க வேண்டும். ஜிஎஸ்டி இழப்பீட்டு வரி 2026 மார்ச் 31 அன்று காலாவதியாகிறது. அதை நீட்டிக்க வேண்டும். எனவே, ஜிஎஸ்டி 2.0 குறித்த அதிகாரப்பூர்வ விளக்க அறிக்கையை அரசு விரைவில் வெளியிட வேண்டும். அது பரந்த விவாதத்திற்கு வழி வகுக்கும். ஜிஎஸ்டி 2.0 உண்மையில் நல்ல, எளிமையான வரியாக இருக்க வேண்டுமே தவிர, இப்போது இருப்பதை போல வளர்ச்சியை அடக்கும் வரியாக இருக்கக் கூடாது. இவ்வாறு அவர் கூறி உள்ளார். இதற்கிடையே, ஜிஎஸ்டி சீர்திருத்தங்களுக்கான பெருமையைப் பெற காங்கிரஸ் முயற்சிப்பதாக ஒன்றிய பாஜ அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட போது அதை ஏற்க மறுத்த காங்கிரஸ், இப்போது அதன் அறிக்கைகள் பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்துகின்றன என்றும் கூறி உள்ளது.

Tags : Congress ,New Delhi ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது