×

தொடரும் மொழியுரிமை மீதான தாக்குதல்!.. இந்தி விசுவாசத்தை காட்டுவதில் ரயில்வேக்கு ஏனிந்த ஆனந்தம்: சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம்!!

மதுரை: தெற்கு ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுக்கு நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்துவிட்டு, தமிழ் கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்த வேண்டும் என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ரயில்வே அமைச்சருக்கு கடிதம் அனுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது;

தொடரும் மொழியுரிமை மீதான தாக்குதல் !

தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்பது விதி.

ஆனால் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடைபெற்றுள்ளது.

இந்தித் திணிப்பும் தமிழ் ஒழிப்புமே இரயில்வேயின் இரட்டை தண்டவாளங்களாக இருக்கிறது.

நடத்தப்பட்ட தேர்வை ரத்து செய்து , தமிழ் கேள்வித்தாளுடன் மறுதேர்வு நடத்து!

*தமிழ் புறக்கணிப்பு*

*இந்தி விசுவாசத்தை காட்டுவதில் ரயில்வேக்கு ஏனிந்த ஆனந்தம்?*

ஒன்றிய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகி விட்டது. இந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம்.

ஆகஸ்ட் 10, 2025 நடத்தப்பட்ட தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு காலியிடத் தேர்வில் கேள்வித் தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித் தாள் தரப்பட வேண்டுமென்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.

இது மொழி உரிமை மீதான தாக்குதல் ஆகும். ஒன்றிய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே.

ஆகவே மேற்கண்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு தமிழ் கேள்வித்தாள் உள்ளிட்டு தரப்பட்டு நடத்தப்பட வேண்டுமென்று மாண்புமிகு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களுக்கும், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதி உள்ளேன். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Tags : Shu ,Venkatesan ,Madurai ,Shri Thackeray ,Southern Railway ,
× RELATED தோஷாகானா ஊழல் தொடர்பான 2வது வழக்கில்...