மதுரை: தூய்மை பணியாளர்களை அதிமுகதான் தனியார்மயப்படுத்தியது. இந்த விவகாரத்தில் அரசியல் செய்வது அற்பமானது என்று திருமாவளவன் கூறியுள்ளார். விசிக தலைவர் திருமாவளவன், நேற்று மதுரையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தூய்மைப்பணியாளர்களை நள்ளிரவில் வலுக்கட்டாயமாக குண்டுக்கட்டாக கைது செய்ய வேண்டிய தேவையில்லை. தூய்மை பணியாளர் விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்பமானது. இதை வைத்து திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்றுதான் நினைக்கின்றனர்.
தூய்மை பணியாளர்கள் தலித்கள். அதனால் திருமாவளவன் தான் பேச வேண்டும் என சொல்வதே சரியாக இருக்காது. எல்லோரும் இந்த பிரச்னையை பேச வேண்டும். ஏன் 13 நாட்கள் போராட்டம் நடத்திய தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவாக அதிமுக போராட்டம் நடத்தவில்லை. கடைசியாக கைது செய்யப்பட்டபோது தான் எடப்பாடி பழனிசாமி ஆதரவாக பேசினார். அதிமுக ஆட்சியில் தான் தூய்மைப்பணியாளர்கள் தனியார்மயப்படுத்தப்பட்டனர்.
அதிமுக ஆட்சியில் 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். முதன்முதலில் அரசாணை 152ஐ அமல்படுத்தியது அதிமுகதான். தனியார் வசம் தூய்மை பணியை ஒப்படைத்ததே அதிமுக தான். இதை திமுகவுக்கு ஆதரவாக சொல்லவில்லை. உண்மையை சொல்கிறேன். ஏன் இப்போது போராட்டம் நடத்துபவர்கள் அதிமுக தனியார்மயப்படுத்தியதைப் பற்றி பேசவில்லை?
அதிமுக செய்தால் அமைதியாக இருக்க வேண்டும். திமுக செய்தால் எதிர்க்க வேண்டும். என்ன அரசியல் இது? இதுதான் அணுகுமுறையா? இவ்வாறு கூறினார். தவெக தலைவர் விஜய் பனையூரில் தூய்மை பணியாளர்களை சந்தித்தது குறித்த கேள்விக்கு, ‘‘அவர் புதிய அணுகுமுறையை கையாளுகிறார். காலம் அவரை மக்களைச் சந்திக்க வைக்கும்’’ என்றார்.
* ‘பாஜ, அமித்ஷா தில்லுமுல்லு எதிர்கொள்ள தயாராவோம்’
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டில் திருமாவளவன் பேசுகையில், தேர்தல் ஆணையத்தை தன் விருப்பம் போல் பாஜ வளைக்கிறது. தேர்தல் ஆணையத்தோடு கைகோர்த்துள்ள பாஜ, பீகாரில் தில்லுமுல்லு வேலையை செய்துள்ளது. அந்த அடிப்படையில் தான், தமிழ்நாட்டிற்கு வரும்போதெல்லாம் உள்துறை அமைச்சர் அமித்ஷா, வரும் 2026ல் தேஜ கூட்டணி ஆட்சி அமைக்கும் என்கிறார்.
அதிமுக தவிர வேறு கட்சிகள் கூட்டணியில் இல்லாத போதும், அவர்கள் அப்படி கூற என்ன காரணம்?. தமிழ்நாட்டிலும் வாக்கு திருட்டு உள்ளிட்ட தில்லுமுல்லுவை செய்து, ஆட்சியை கைப்பற்ற பாஜவினர் திட்டமிட்டுள்ளார்கள் என்பதை யூகிக்க முடிகிறது. அப்படி ஒரு தில்லுமுல்லு செய்தால், அதனை எதிர்கொள்ள தயாராக வேண்டும். 2026 தேர்தலில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி, ஜனநாயகம் வெல்ல அடித்தளமாக அமையும் என்றார்.
