×

நடுவானில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானத்தில் திடீர் இயந்திர கோளாறு: சென்னையில் அவசரமாக தரையிறக்கம்

சென்னை: மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து கேரள மாநிலம், கோழிக்கோடுக்கு ஏர் ஏசியா விமானம் 158 பயணிகள், 8 விமான ஊழியர்கள் என 166 பேருடன் நேற்று முன்தினம் இரவு புறப்பட்டு, கோழிக்கோடு நோக்கி சென்று கொண்டு இருந்தது. இந்நிலையில் ஏர் ஏசியா விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு 11.50 மணிக்கு சென்னை வான்வெளியில் நடுவானில் பறந்துகொண்டு இருந்தபோது திடீரென இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.

விமானத்தை தொடர்ந்து இயக்குவது ஆபத்து என்பதை உணர்ந்து, விமானத்தை அவசரமாக தரையிறக்க விமானி முடிவு செய்தார். உடனடியாக, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டு, விமானத்தை சென்னையில் அவசரமாக தரையிறக்க அனுமதி கேட்டார். இதையடுத்து, சென்னை விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் துரிதமாக செய்து முடிக்கப்பட்டது.

அதன் பின்பு அந்த விமானம் சென்னையில் தரையிறங்க அனுமதி அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஏர் ஏசியா விமானம் நள்ளிரவு 12.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. சென்னை விமான நிலைய பொறியாளர்கள் குழுவினர் விமானத்துக்குள் ஏறி விமானத்தை பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட்டனர். ஆனால் விமானத்தை உடனடியாக பழுது பார்க்க முடியவில்லை. எனவே, பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டனர்.

அதோடு சென்னை விமான நிலையத்தில் இருந்து சொகுசு பேருந்துகளில் ஏற்றப்பட்டு, சென்னையில் உள்ள பல்வேறு ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். விமானம் பழுது பார்க்கப்பட்டு மாலையில் மீண்டும் கோழிக்கோடு புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த விமானம் நடுவானில் பறந்துகொண்டு இருந்தபோது, திடீர் இயந்திர கோளாறை விமானி கண்டுபிடித்து, உடனடி நடவடிக்கை எடுத்து விமானத்தை அவசரமாக சென்னையில் பாதுகாப்பாக தரையிறக்கியதால் விமானத்திலிருந்த பயணிகள் உள்பட 166 பேர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

Tags : Chennai ,Air Asia ,Kuala Lumpur ,Kozhikode ,Kerala ,Air… ,
× RELATED தேசிய வருவாய் வழி மற்றும் திறன்...