- தேசிய நெடுஞ்சாலை
- கும்மிடிப்பூண்டி
- சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை
- கும்மிடிப்பூண்டி காவல் நிலையம்...
கும்மிடிப்பூண்டி, ஆக. 14: கும்மிடிப்பூண்டி அருகே வேர்காடு சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. எனவே ஆமை வேகத்தில் நடைபெறும் சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கும்மிடிப்பூண்டி காவல் சரக எல்லைக்கு உட்பட்ட பஞ்சட்டியில் இருந்து ஆரம்பாக்கம் வரை ஆந்திராவை இணைக்கும் சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே ஆரணி ஆறு மேம்பாலம் உள்ளிட்ட பல்வேறு மேம்பாலங்கள் ஆரம்பாக்கம் வரை போடப்பட்டுள்ளன. இந்தநிலையில் கடந்த ஆண்டு பெருவாயல் பகுதியில் உள்ள ஆரணி ஆறு மேம்பாலத்தின் நடுவே மேம்பாலத்தை இணைக்கும் பகுதியில் பள்ளம் ஏற்பட்டு கம்பிகள் வெளியே தெரிகிறது.
இந்த இடம் மட்டும் தாழ்வாக இருப்பதால் சென்னையில் இருந்து ஆந்திரா நோக்கி வரும் கார், கனரக வாகனங்கள் வேகமாக செல்லும்போது வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இதில் சென்னையைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி இந்த மேம்பாலம் வழியாக ஆந்திரா நோக்கி சில மாதங்களுக்கு முன்பு சென்றுகொண்டிருந்தனர். அப்போது ஒரு ஈச்சர் வாகனம் திடீரென மேம்பாலத்தின் தாழ்வான பகுதியில் மெதுவாக சென்றபோது பின்னால் வந்த காதல் ஜோடி விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தின் எதிரொலியாக போலீசார் இதை சீரமைக்க வேண்டும் என கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு புகாராக அரசு மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து மேம்பாலத்தை இணைக்கும் தாழ்வான பகுதியை அதற்கு ஏற்றார்போல் கான்கிரீட் அமைக்கும் பணி கடந்த 3 மாதங்களாக நடைபெற்று தற்போது முடிவுற்ற பின்பு வாகனங்கள் மெதுவாக செல்கின்றன. ஆனால் வேர்க்காடு அருகே உள்ள மேம்பாலம் நடுவே உள்ள கம்பிகளை நீக்கி கான்கிரீட் அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டி வைத்துள்ளனர். அதைச் சுற்றி வாகனங்கள் செல்லும் வகையில் பிளாஸ்டிக் தடுப்புகளை சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் அமைத்துள்ளனர்.
ஆனால் சுமார் ஒரு மாத காலமாகியும் பணி இதுவரை முடியாததால் சாலை நடுவில் வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் தடுப்புகள் ஆங்காங்கே திரும்பி, புதிதாக வரும் வாகன ஓட்டிகள் விபத்து ஏற்படும் என அச்சப்படுகின்றனர். அந்த இடத்தில் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் மெட்ரோ ரயில் பணிக்கு அமைக்கும் தடுப்புகளை அமைக்க வேண்டும் எனவும், 24 மணி நேரமும் சம்பந்தப்பட்ட இடத்தை கண்காணிக்க வேண்டும் எனவும், கவனிக்கவில்லையெனில் பல உயிர்கள் போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் வாகன ஓட்டிகள் கூறுகின்றனர். இது சம்பந்தமாக சென்னை-கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை பராமரிப்பு மேலாளர் சுரேஷிடம் கேட்டபோது, மேம்பாலத்தில் போடப்படும் கம்பிகள் இன்னும் தயார் செய்யப்படவில்லை. ஒரு வாரங்களில் கம்பிகள் பொருத்தி கான்கிரீட் ஊற்றப்படும் என்றார். மாவட்ட கலெக்டர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று உதிரி பாகங்களை தயார் செய்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
