×

காளாப்பூரில் கோயில் இடத்தை அளவீடு செய்ததாக கிராம மக்கள் சாலை மறியல்

சிங்கம்புணரி, ஏப்.5: சிங்கம்புணரி அருகே காளாப்பூரில் கோயில் இடத்தை வருவாய்த் துறையினர் அளவீடு செய்ததாக கூறி, அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியலில் கலந்து கொண்ட பெண்களில் ஒருவர் மண்ணெண்ணெய் கேனுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிங்கம்புணரி அருகே காளாப்பூர் பெரிய பாலம் பகுதியில் பழமையான கொக்கன் கருப்பர் கோயில் உள்ளது. சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் உள்ள இவ்விடத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் பல ஆண்டுகளாக திருவிழாக்கள் வழிபாடுகள் நடத்தி வருகின்றனர். சிங்கம்புணரி பகுதிக்கு சார்பு நீதிமன்றம் கட்டுவதற்காக வருவாய்த் துறையினர் பல்வேறு இடங்களை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கொக்கன் கருப்பர் கோயில் நிலத்தை அளவீடு செய்யும் பணியில் நேற்று மதியம் வருவாய்த் துறையினர் ஈடுபட்டனர்.

இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் கோயில் இடத்தை அளவிட செய்வதை கண்டித்து திருப்புத்தூர்-திண்டுக்கல் நெடுஞ்சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மண்ணெண்ணெய் கேனுடன் பெண் ஒருவர் சாலை மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டார். அவரிடம் இருந்து போலீசார் மண்ணெண்ணெய் கேனை பறித்து சென்றனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்த திடீர் மறியலால் திருப்புத்தூர்-திண்டுக்கல் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தாசில்தார் சாந்தி மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் பொதுமக்கள் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் குறித்து சிங்கம்புணரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post காளாப்பூரில் கோயில் இடத்தை அளவீடு செய்ததாக கிராம மக்கள் சாலை மறியல் appeared first on Dinakaran.

Tags : Kalapur ,Singampunari ,
× RELATED சிங்கம்புணரியில் எருதுகட்டு விழா