புதுடெல்லி: டெல்லியில் தெரு நாய்களை அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி அதிருப்தி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்றுமாறும், நிரந்தர தங்குமிடங்களுக்கு மாற்றுமாறும் டெல்லி என்சிஆர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி தனது எக்ஸ் தள பதிவில், டெல்லி என்சிஆரில் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்ற வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவானது, பல தசாப்தங்களாக மனிதாபிமான, அறிவியல் ஆதரவு கொள்கையில் இருந்து பின்வாங்குவதாகும். வாயில்லாத இந்த ஆன்மாக்கள் அழிக்கப்பட வேண்டிய பிரச்னைகள் இல்லை. தங்குமிடம், கருத்தடை, தடுப்பூசி மற்றும் சமூக பராமரிப்பு ஆகியவை தெருக்களை பாதுகாப்பாக வைத்திருப்பதற்கு முடியும். இவைகளை அகற்றுவது கொடூரமானது. குறுகிய பார்வை கொண்டது. மேலும் நமது இரக்கத்தை பறிக்கிறது. பொது பாதுகாப்பும், விலங்கு நலனும் கைகோர்த்துச் செல்வதை நாம் உறுதி செய்ய முடியும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.
