×

மானாமதுரையில் தயாராகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள்: ரசாயனச் சேர்க்கை இல்லை

மானாமதுரை: விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வரும் நிலையில், மானாமதுரையில் ரசாயனம் தவிர்த்து, சுற்றுச்சூழலுக்கு உகந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி விழா ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வரும் 27ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக பலவித விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் சிலர் விதிகளை மீறி ரசாயனப் பொருட்கள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் சிலைகளை தயாரிக்கின்றனர். இந்த சிலைகள் நீரில் எளிதில் கரையாது என்பதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. ஆனால், இதற்கு மாற்றாக சிவகங்கை மாவட்டம், மானாமதுரை பகுதியில் பாரம்பரிய முறையில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அதாவது, இங்கு சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் களிமண் உள்ளிட்ட இயற்கையான மூலப் பொருட்களால் மட்டுமே விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. சிலைகள் தயாரிப்பு பணி கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு, கண்களை கவரும் வகையில் கலை நயத்துடன் பல்வேறு வடிவங்களில் விநாயகர் சிலைகள் தயாராகிறது. குறிப்பாக குடை விநாயகர், யாத்திரை விநாயகர், மூன்றுமுக விநாயகர், கிரிக்கெட் விநாயகர், கற்பக விநாயகர், ஆனந்த விநாயகர், இலை விநாயகர், தேங்காய் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மண்பாண்ட கலைஞர் பாண்டியராஜன் கூறுகையில், ‘பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மூலம் தயாரிக்கப்படும் சிலைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்பதால் மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது.

இந்த பகுதியில் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய முறையில் மண்ணால் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்து மத ஐதீகப்படி மண்ணால் ஆன விநாயகர் சிலைகளே பூஜைக்கு உகந்தவை என்பதால் இந்த சிலைகளுக்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது. வீடுகளில் வைத்து வழிபடுவதற்கான சிலைகளை அளவுக்கேற்ப ரூ.20ல் தொடங்கி ரூ.500 வரையிலான விலையில் தயாரித்து வருகிறோம். பொது இடங்களில் வைத்து வழிபட 2 அடி முதல் 6 அடி வரை உயரமுள்ள சிலைகளும் ஆர்டரின் பேரில் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த சிலைகள் உயரத்திற்கேற்ப ரூ.5 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை விற்கப்படுகிறது’ என்றார்.

Tags : Manamadura ,Manamadurai ,Vinayagar Chaturthi festival ,India ,
× RELATED தமிழகம் முழுவதும் உள்ள கிறிஸ்துவ...