×

புயல், காற்று காலங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க தூண்டில் வளைவு ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தல்

ராமேஸ்வரம், டிச. 8: புயல், காற்று காலங்களில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க ராமேஸ்வரத்தில் தூண்டில் வளைவு அமைக்க வேண்டுமென மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர். புரெவி புயல் எச்சரிக்கையினால் கடந்த 30ம் தேதி முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. இதனால் 800க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டது. இதில் பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த விசைப்படகுகளில் 50க்கும் மேற்பட்டவை பலத்த காற்றினால் சேதமடைந்து கரை ஒதுங்கியது. சேதமடைந்த படகுகளை முறையாக ஆய்வு செய்து உரிய நிவாரணம் வழங்கிட வேண்டும் என மீனவர்கள் அரசிடம் வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கிடையே கடந்த 8 நாட்களாக ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் நேற்று ராமேஸ்வரம் துறைமுகத்தில் மீனவர் பிரதிநிதிகளின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அனைத்து விசைப்படகு சங்க செயலாளர் சேசுராஜ் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், குந்துகால் கடல் பகுதியில் சேதமடைந்த படகுகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். பலத்த காற்றினால் கடலில் மூழ்கி மீட்க முடியாமல் போன மீனவர் சர்புதீன் படகிற்கு அரசு நஷ்டஈடு வழங்க வேண்டும்.

குந்துகால் கடல் பகுதியில் நிறுத்தப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 116 படகுகளுக்கும் தலா 200 லிட்டர் டீசல் வழங்கிட வேண்டும். புயல் காலங்களில் பாம்பன் கடலில் பாலத்தை கடந்து சென்று வர மீனவர்களின் வசதிக்கேற்ப ஷெர்ஜர் பாலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். புயல் காற்று காலத்தில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் விசைப்படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கும் வகையில் தூண்டில் வளைவு திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மீனவ சங்க பிரதிநிதிகள் போஸ், சகாயம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : fishermen ,Rameswaram ,seasons ,storms ,
× RELATED யாழ்ப்பாணம் நீதிமன்றத்தால் தண்டனை...