×

சொந்தக் கட்சிக்கே எதிராகப் பேசிய விவகாரம்; அமைச்சர் பதவியை பறித்த பின்னணியில் ‘சதி’: கர்நாடகா காங். மூத்த தலைவர் கதறல்

பெங்களூரு: வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து சொந்தக் கட்சிக்கு எதிராகப் பேசியதால், பதவி நீக்கம் செய்யப்பட்ட கர்நாடக அமைச்சர், தனக்கு எதிராக திட்டமிட்டு சதி நடந்துள்ளதாக கொந்தளித்துள்ளார். கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையாவின் நெருங்கிய ஆதரவாளரும், அம்மாநில அமைச்சருமான கே.என்.ராஜண்ணா, வாக்காளர் பட்டியல் முறைகேடு குறித்து சமீபத்தில் பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. எதிர்கட்சியான பாஜகவின் தூண்டுதலின் பேரில், தேர்தல் ஆணையம் போலி வாக்காளர்களைச் சேர்ப்பதாக காங்கிரஸ் கட்சி தீவிரமாகக் குற்றம்சாட்டி வரும் நிலையில், ராஜண்ணா அதற்கு நேர்மாறான கருத்தைத் தெரிவித்திருந்தார்.

அவர், ‘வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது நம்முடைய காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்தான். அப்போது நம் தலைவர்கள் அனைவரும் கண்களை மூடிக்கொண்டு அமைதியாக இருந்தார்களா? நமது கண்முன்னே இந்த முறைகேடுகள் நடந்ததற்காக நாம் வெட்கப்பட வேண்டும்’ என்று அவர் பேசியிருந்தார். இவரது பேச்சு காங்கிரசுக்கு பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால் பாஜகவிற்கு இவரது பேச்சு அரசியல் ஆயுதமாக அமைந்தது. சட்டமன்றத்திலும் இதுதொடர்பாக விவாதம் எழுந்த நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியின் அறிவுறுத்தலின் பேரில், ராஜண்ணா அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். இந்த அதிரடி நடவடிக்கைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ராஜண்ணா, ‘எனது தற்போதைய நிலையை, ராஜினாமா, பதவி நீக்கம் அல்லது பதவி விலகல் என்று எப்படி வேண்டுமானாலும் கூறுங்கள்.

ஆனால் இதன் பின்னணியில் பெரிய சதியும் திட்டம் உள்ளது. எப்போது, எங்கே, யாரால் நடந்தது என்பதை உரிய நேரத்தில் வெளிப்படுத்துவேன். எனது தரப்பு விளக்கத்தை டெல்லி சென்று ராகுல் காந்தி, மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் ஆகியோரைச் சந்தித்து அளிப்பேன். என்னுடன் சில அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் வருவார்கள்’ என்று கூறினார். முன்னதாக முதல்வர் சித்தராமையா, ராஜண்ணாவை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கத் தயங்கியதாகவும், ஆனால் கே.சி.வேணுகோபாலின் தலையீட்டிற்குப் பிறகே இந்த முடிவை எடுத்ததாகவும் காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Tags : Karnataka Congress ,Bengaluru ,Karnataka ,K.N. Rajanna ,Chief Minister ,Siddaramaiah ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது