×

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு விழிப்புணர்வு

*துணை சபாநாயகர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

திருவண்ணாமலை : சென்னையில் நேற்று நடந்த போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு பிரசார பெருந்திரள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை தாங்கி காணொலி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தலைமையில் நடந்தது. கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி சுதாகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ், எஸ்பி சுதாகர் ஆகியோர் முன்னிலையில் கல்லூரி மாணவ, மாணவிகள் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து மாவட்ட அளவில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வுகளில் சிறந்த முறையில் செயலாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தி முதலிடம் பெற்ற திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரிக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகையும், இரண்டாமிடம் பெற்ற செய்யாறு அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிக்கு ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும், மூன்றாமிடம் பெற்ற திருவண்ணாமலை சண்முகா இண்டஸ்ட்ரீஸ் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.5 ஆயிரமும் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.

போதைப் பொருள் எதிர்ப்பு குழுக்கள் நன்முறையில் செயல்பட்டதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகள் முதலிடம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மேல்பள்ளிப்பட்டு ரூ.15 ஆயிரம், இரண்டாமிடம், அரசு மேல்நிலைப்பள்ளி குன்னத்தூர் ரூ.10ஆயிரம், மூன்றாமிடம், அரசு மேல்நிலைப்பள்ளி தச்சம்பட்டு ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது.

மேலும் கலைஞர் கருணாநிதி அரசு கலைக்கல்லூரியில் நடைபெற்ற போதை ஒழிப்பு விழிப்புணர்வு கவிதைப்போட்டி, பேச்சுப்போட்டி, பாட்டுப்போட்டி ஆகிய போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் தர்ப்பகராஜ் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில், ஏஎஸ்பி சதீஷ், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை உதவி ஆணையர் (கலால்) செந்தில்குமார், கல்லூரி முதல்வர் ரேவதி, பேராசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tags : Thiruvannamalai Artist ,Karunanidhi Government Arts College ,Tamil Nadu ,Deputy Speaker ,Tiruvannamalai ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Chennai ,
× RELATED நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்..!!