×

உள்நோக்கமின்றி பெண்ணின் கையை பிடித்தது குற்றமாகாது: தண்டனையை ரத்து செய்தது ஐகோர்ட்

மதுரை: உள்நோக்கமின்றி பெண்ணின் கையை பிடித்து இழுத்தது குற்றமாகாது எனக் கூறியுள்ள ஐகோர்ட் கிளை, சிறை தண்டனையை ரத்து செய்தது.மதுரை மாவட்டம், சோழவந்தான் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவர் கடந்த 2015ல் அருகேயுள்ள கிராமத்தில் கால்நடை மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த திருமணமாகாத மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக, அப்பெண்ணின் தாயார் சோழவந்தான் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.  இப்புகாரின் பேரில் எஸ்சி-எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் முருகேசனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மதுரை நீதிமன்றம், முருகேசனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து முருகேசன், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா பிறப்பித்த உத்தரவு: ஒரு பெண்ணின் கைகளை ஒரு ஆண் பிடித்து இழுப்பது என்பது அப்பெண்ணின் கண்ணியத்தை பாதிக்கும் செயலாகும். இருப்பினும் உள்நோக்கம் இல்லாமல் கையை பிடித்து இழுப்பது அந்த பெண்ணை அவமதிப்பதாகாது. அது குற்றமும் இல்லை. இது போன்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆணின் உள்நோக்கம் நிரூபிக்கப்படாவிட்டால் அது அவருக்கு சாதகமாகவே அமையும். இந்த வழக்கில் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் பெண்ணை தொந்தரவு செய்ய வேண்டும் என்ற உள்நோக்கத்துடன், மனுதாரர் கையை பிடித்து இழுத்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

பாதிக்கப்பட்டவரை ஒரு சாட்சியாக விசாரிக்கவில்லை. நேரில் பார்த்த சாட்சிகள் கூறியதில் பல்வேறு முரண்பாடுகள் உள்ளன. அதன் அடிப்படையில் உறுதியான சான்றுகள் இல்லாமல் தண்டனை வழங்குவது சரியானதல்ல. இதனால் பெண்ணின் கையை பிடித்து இழுத்ததில் மனுதாரர் உள்நோக்கத்துடன் இருந்தார் என்பது நிரூபிக்கப்படாததால், சந்தேகத்தின் பலனை மனுதாரருக்கு வழங்கி அவருக்கு வழங்கிய 3 ஆண்டு சிறை தண்டனை ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Tags : HC ,Madurai ,Murugesan ,Cholavandhan ,
× RELATED செல்போனில் பேசியபடி தண்டவாளத்தில்...