×

அசாம் தேயிலைத் தோட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்கார கொலை: சிறை தண்டனை அனுபவித்த குற்றவாளி கைது

திப்ருகர்: அசாம் தேயிலைத் தோட்டத்தில் 8 வயது சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஏற்கனவே சிறை தண்டனை அனுபவித்த குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். அசாம் மாநிலம், திப்ருகர் மாவட்டம் நாம்ரூப் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கச்சாரி பத்தார் என்ற இடத்தில் தேயிலைத் தோட்டம் பகுதியில் விறகு சேகரிப்பதற்காக, அதே பகுதியை சேர்ந்த எட்டு வயது சிறுமி சென்றார். அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவன், சிறுமி தனியாக இருந்ததைக் கண்டு அவரிடம் பேச்சு கொடுத்தார். பின்னர் அந்த சிறுமியை மறைவான இடத்திற்கு அழைத்து பாலியல் பலாத்காரம் செய்தான். பின்னர் சிறுமியை மூச்சுத்திணறடித்துக் கொன்றான். தொடர்ந்து சிறுமியின் உடலை அருகிலிருந்த வடிகாலில் மறைத்து, வைக்கோல் மற்றும் புற்களைக் கொண்டு மூடிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டான்.

விறகு சேகரிக்க சென்ற சிறுமி வீடு திரும்பாததால், அவரது பெற்றோரும், அக்கம்பக்கத்தினரும் தேடியபோது, சம்பவம் நடந்த நாளின் இரவு 8.40 மணியளவில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தகவலறிந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதுகுறித்து நாம்ரூப் பகுதி காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரசென்ஜித் தாஸ் கூறுகையில், ‘தேயிலைத் தோட்டத்தில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில், ஏற்கனவே கொலை வழக்கில் சிறை சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர், இதற்கு முன்னரே தனது தாயாரைக் கொலை செய்த குற்றத்திற்காக 14 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவித்து, மூன்று ஆண்டுகளுக்கு முன்புதான் விடுதலையாகியுள்ளார். தற்போது அவரை போக்சோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளோம்’ என்றார்.

Tags : Assam tea garden ,Dibrugarh ,Kachari Bhattar ,Namrup ,Dibrugarh district ,Assam… ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அத்யாயன உற்சவம் தொடங்கியது