×

சட்டசபை தேர்தல் களத்தில் பாஜகவின் புதிய உத்தி; அயோத்தி ராமர் கோயிலை போல் பீகாரில் சீதைக்கு கோயில்: ரூ.883 கோடி பணிக்கு அமித் ஷா, நிதிஷ்குமார் அடிக்கல் நாட்டிய பின்னணி

பாட்னா: பீகார் சட்டமன்றத் தேர்தலைக் குறிவைத்து, எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, சீதாமர்ஹியில் சீதைக்கு மிகப்பெரிய கோயில் கட்டும் திட்டத்திற்கு ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் முதல்வர் நிதிஷ் குமார் அடிக்கல் நாட்டினர். பீகார் மாநிலம் சீதாமர்ஹி மாவட்டம் புனவுரா தாம் பகுதியானது, ராமாயணத்தில் வரும் சீதையின் பிறப்பிடமாகக் கருதப்படுகிறது. இந்த புனிதத் தலத்தில் சீதை கோயில் மற்றும் அதன் வளாகத்தை மேம்படுத்துவதற்கான விரிவான திட்டத்திற்கு, பீகார் மாநில அமைச்சரவை கடந்த ஜூலை 1ம் தேதி ஒப்புதல் வழங்கியது. இதற்காக ஏற்கெனவே இருந்த 17 ஏக்கர் நிலத்துடன், கூடுதலாக 50 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொத்தமாக 67 ஏக்கர் பரப்பளவில் இந்தத் திருக்கோயில் வளாகம் அமையவுள்ளது. கோயில் வளாக மேம்பாட்டுப் பணிகளுக்காக மொத்தம் ரூ.882.87 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், பழைய கோயிலையும் அதன் வளாகத்தையும் மேம்படுத்த ரூ.137 கோடியும், சுற்றுலா தொடர்பான பணிகளுக்காக ரூ.728 கோடியும் செலவிடப்படவுள்ளது. மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கான விரிவான பராமரிப்புப் பணிகளுக்காக ரூ.16 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் தொடக்கமாக, சீதாமர்ஹியில் உள்ள புனவுரா தாமில், சீதா கோயில் புனரமைப்புப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோர் தலைமையில் பூமிபூஜை செய்து கோயில் கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2020ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காகப் பிரதமர் மேடியும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் அடிக்கல் நாட்டினர்.

அதே ஆகஸ்ட் மாதமான இந்த மாதத்தில் கடந்த 8ம் தேதி சீதைக்கு கோயில் எழுப்ப அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பீகாரில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சீதை கோயில் கட்டும் பணியின் பின்னணியில் அயோத்தியின் சாயலையே உணர முடிகிறது. அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதே இலக்காக கொண்டே பல மாநிலங்களில் ஆட்சியை பிடித்து மத்தியில் பாஜக ஆட்சி பிடித்தது. கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் அயோத்தி ராமர் கோயில் அரசியல் ரீதியான உத்திக்குப் பெரிய அளவில் பலனளிக்கவில்லை என்றாலும், பீகார் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டணியின் தாக்குதல்களை மழுங்கடிக்க இந்த சீதைக்கு கோயில் கட்டும் திட்டம் அரசியல் ரீதியாக முக்கியப் பங்காற்றக்கூடும் என பாஜக நம்புகிறது. மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கு எதிராக முன்வைக்கும் விமர்சனங்களின் தீவிரத்தையும் சீதா கோயில் பணிகள் குறைக்கும் என்று கூறுகின்றனர்.

‘ஜெய் ராம்’ என்பதற்குப் பதிலாக ‘ஜெய் சியாராம்’ என்று முழக்கமிடத் தயாரா? என அறைக்கூவல் விடுத்த ராகுல் காந்தி, இனிமேல் அவ்வாறு செய்வதற்கு முன்பு யோசிக்க வேண்டியிருக்கும். இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில், ‘ராமரின் பிறப்பையே ஏற்க மறுத்தவர்களுக்கு, குறிப்பாக காங்கிரசுக்கு, சீதை கோயில் கட்டுமானப் பணி முகத்தில் விடப்பட்ட அறை’ என்றார். சீதைக்கு கோயில் கட்டும்பணி 11 மாதங்களில் கட்டி முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கோயில் கட்டி முடிக்கப்படும்போது, பீகாரில் புதிய அரசு அமைந்திருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியே மீண்டும் ஆட்சியமைக்கும் என்றும், நிதிஷ் குமாரே முதல்வராகத் தொடர்வார் என்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர்.

புதிய கோயில் வளாகத்தில் 151 அடி உயர மிகப்பெரிய கோபுரம், கோயிலைச் சுற்றி சிறப்பு பிரகாரப் பாதை, யாக மண்டபம், அருங்காட்சியகம், அரங்கம், உணவகம், தர்மசாலை, சீதை பூங்கா, லவகுஷ் பூங்கா போன்ற பல்வேறு சுற்றுலா அம்சங்களும் உருவாக்கப்பட உள்ளன. இந்தத் திட்டத்தின் மூலம், மிதிலாஞ்சல் பகுதியிலுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளிலும் (தற்போது 40 தொகுதிகள் தேசிய ஜனநாயகக் கூட்டணியிடம் உள்ளன) தாக்கத்தை ஏற்படுத்தி, கடந்த 2020 தேர்தலில் பெற்ற வெற்றியை விட தற்போது அதிக இடங்களைப் பெற பாஜக இலக்கு வைத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Tags : BJP ,Temple of Sith ,Bihar ,Ayodhi Ramar Temple ,Amit Shah ,Nitish Kumar Laying ,Union Interior Minister ,Chief Minister ,Nitish Kumar ,Sith ,Sitamarhi ,Bihar Assembly elections ,Bihar State Sitamarhi ,
× RELATED நாட்டின் விடுதலைக்காக போராடிய...