×

பைக் மீது லாரி மோதி தீப்பற்றியது: ஐடி ஊழியர் கருகி பலி

சென்னை: காவேரிப்பாக்கம் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில், சென்னையை சேர்ந்த ஐடி ஊழியர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு சின்ன கோயில் பகுதியை சேர்ந்தவர் பாக்கியராஜ் (38), டிப்பர் லாரி டிரைவர். இவர் நேற்று காலை செங்கல்பட்டு பகுதியில் இருந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள மணல் குவாரிக்கு டிப்பர் லாரியை ஓட்டி வந்து கொண்டிருந்தார். ராணிப்பேட்டை மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த சுமைதாங்கி அருகே சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது முன்னால் சென்ற பைக் மீது டிப்பர் லாரி மோதியது. இதில், பைக் ஓட்டி வந்த வாலிபர், டிப்பர் லாரியின் முன் பகுதியில் சிக்கி சிறிது தூரம் பைக்குடன் இழுத்து செல்லப்பட்டார். இதனால், பைக்கில் இருந்து பெட்ரோல் கசிந்து தீப்பற்றிக்கொண்டது. அப்போது திடீரென பைக் மற்றும் லாரி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. இதில், வாலிபர் உடல் முழுவதும் மளமளவென தீப்பற்றி எரிய தொடங்கியது. சிறிது நேரத்தில் வாலிபர் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டிப்பர் லாரி ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சென்று விசாரணை நடத்தினர். மேலும், ராணிப்பேட்டை தீயணைப்பு துறையினர் அங்கு சென்று தீயை அணைத்தனர். இதையடுத்து, போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில் தீயில் கருகி உயிரிழந்த வாலிபர், சென்னை மாம்பாக்கத்தை சேர்ந்த ரவீந்தரனார் என்பவரது மகன் மனுகாசியாய் (22) என்பதும், பெங்களூருவில் ஐடி கம்பெனியில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. கடந்த 2ம் தேதி வீட்டிற்கு வந்த மனுகாசியாய் நேற்று அதிகாலை 5.30 மணியளவில் வீட்டில் இருந்து பெங்களூருவுக்கு பைக்கில் புறப்பட்டுள்ளார். அப்போது விபத்தில் கருகி பலியானார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், லாரி டிரைவரை தேடி வருகின்றனர். இந்த விபத்தால், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post பைக் மீது லாரி மோதி தீப்பற்றியது: ஐடி ஊழியர் கருகி பலி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kaveripakkam ,Dinakaran ,
× RELATED காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில்...