நாமக்கல், ஏப்.5: பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் கீழ், நாமக்கல்லில் சாலையோர வியாபாரிகள் 600 பேருக்கு ₹80 லட்சம் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் முதல் அலை பாதிப்பால், நாடு முழுவதும் கடந்த 2020ம் ஆண்டு மார்ச் மாதம் முதல், ஜூலை வரை கடும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதில் பல தொழிலாளர்கள், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தனர். குறிப்பாக, ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள், முற்றிலுமாக தங்களின் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர். இவர்களுக்கு உதவும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு உதவிகளை செய்தது.
தமிழகத்தில் உள்ள சாலையோர வியாபாரிகளுக்கு, பிரதமரின் ‘ஸ்வநிதி’ திட்டத்தில் ₹10 ஆயிரம் சிறப்பு கடன் வழங்கப்படும் என, கடந்த 2020ம் ஜூன் மாதம் மத்திய அரசு அறிவித்தது. இந்த கடனை மாதத்தவணையாக, ஓராண்டிற்குள் திருப்பிச்செலுத்த வேண்டும். முறையாக கடனை திருப்பி செலுத்தினால், 7 சதவீத வட்டி மானியம் கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தில் கடன்பெற, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சிகளிலும் சாலையோர வியாபாரிகளிடம் மனுக்கள் பெறப்பட்டது. நாமக்கல் நகராட்சியில் சாலையோரத்தில் கடை வைத்து பழம், காய்கறி, பூண்டு, இளநீர், சில்லி சிக்கன், இரவுநேர டிபன் கடை நடத்தி வருபவர்கள் என 950 பேர், இந்த கடன்பெற நகராட்சியில் விண்ணப்பம் செய்தனர்.
இவர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இவர்களின் மனுக்கள் கடன் உதவி அளிக்க வங்கிக்கு பரிந்துரை செய்யப்பட்டது. இந்த திட்டம் நாமக்கல் நகராட்சியில் தொடர்ந்து நடைமுறை படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், நாமக்கல் நகரில் பல இடங்களில் சாலையோரங்களில் கடை வைத்துள்ள, 600 பேருக்கு இதுவரை வங்கி கடனாக ₹80 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் நகராட்சி ஆணையாளர் சுதா தலைமையில், வங்கியாளர்கள் பங்கேற்ற சிறப்பு கூட்டம், நாமக்கல் நகராட்சியில் நடத்தப்பட்டு, சாலையோர வியாபாரிகளிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களை நகராட்சி நகரமைப்பு அலுவலர் ரவீந்திரன் தலைமையிலான குழுவினர் பரிசீலனை செய்து, சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு அனுப்பி வைத்து வியாபாரிகளுக்கு கடன் உதவிக்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: நாமக்கல் நகராட்சியில், பல்வேறு இடங்களில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், கடைகள் வைத்துள்ள சாலையோர வியாபாரிகள் 500 பேருக்கு முதல் தவனை கடனாக, வங்கிகள் மூலம் தலா ₹10 ஆயிரம் கடன் உதவி, குறைந்த வட்டியில் வழங்கப்பட்டுள்ளது. இதை சரியாக திருப்பி செலுத்திய, 100 வியாபாரிகளுக்கு, 2ம் தவனை கடனாக ₹20 ஆயிரம், வங்கிகள் கடன் உதவி அளித்துள்ளது. மேலும் 2 பேர் 3ம் தவனை கடனாக தலா ₹50 ஆயிரம் பெற்று பயனடைந்துள்ளனர். தகுதியான சிறு வியாபாரிகள் இந்த திட்டத்தின் கீழ் கடன்உதவி பெற, நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
The post 600 சாலையோர வியாபாரிகளுக்கு ₹80 லட்சம் கடனுதவி appeared first on Dinakaran.