×

முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் எடப்பாடி இதுவரை வாய் திறக்காதது ஏன்? திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வி

சென்னை: வாக்காளர் பட்டியல் திருத்தம் குறித்து எடப்பாடி இதுவரை வாய் திறக்காதது ஏன் என்று திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை: நாடாளுமன்ற தேர்தலில் வென்ற காங்கிரஸ் கூட்டணி, பாஜவும் தேர்தல் ஆணையம் கூட்டணி போட்டுச் செய்த சதித்திட்டத்தால் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டது.

இந்த சதியை அம்பலப்படுத்த வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை வழங்குமாறு தேர்தல் ஆணையத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேட்ட போது வாக்குச்சாவடிகளில் எடுக்கப்பட்ட வீடியோக்களை தேர்தல் நடந்து 45 நாட்களுக்குப்பின் அழித்து விடுமாறு மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது எனச் சொல்லி வாக்குச்சாவடி கண்காணிப்பு கேமரா பதிவுகளை எல்லாம் அழித்திருக்கிறார்கள்.

இதே பாணியில்தான் வரப் போகிற பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் மோசடிகளை அரங்கேற்ற பாஜ முயல்கிறது. சிறப்புத் தீவிர திருத்தம் என்ற பெயரில் பீகார் மாநில வாக்காளர் பட்டியலிலிருந்து பாஜவிற்கு எதிரான மனநிலை கொண்ட வாக்காளர்கள் பல லட்சம் பேரை நீக்கியிருக்கிறது ஒன்றிய பாஜ அரசு. தேர்தல் ஆணையத்தின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கையினால் பீகாரில் 65 லட்சம் பேர் தங்களது வாக்குரிமையை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அடுத்த ஆண்டு தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்க இருக்கும் சூழலில், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைகள் தமிழ்நாட்டிலும் மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும். நாட்டில் ஜனநாயகத்திற்கும் தமிழ்நாட்டு மக்களின் அரசியல் உரிமைக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தில் வாய்மூடி கள்ள மவுனம் காத்து தமிழ்நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய துரோகத்தைச் செய்து கொண்டிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

பாஜவின் அடிமையாய் மாறி, அதிமுகவை அடமானம் வைத்தவர், தமிழ்நாட்டு வாக்காளர்களையும் டெல்லியிடம் அடமானம் வைக்கத் துணிந்துவிட்டாரா, இல்லை என்றால் முறைகேடான வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி இதுவரை வாய் திறக்காதது ஏன்?

தமிழ்நாட்டில் அரசியல் ரீதியாகப் போராடி வெற்றி பெற முடியாத அடிமைகளும் அவர்கள் எஜமானர்களும் குறுக்கு வழியில் வெற்றி பெற்று விடலாம் என்று கனவு கண்டால், அது ஒருபோதும் நடக்காது. முதல்வர் மு.க.ஸ்டாலினோடு தமிழ்நாட்டு மக்கள் ஓரணியில் திரண்டு நின்று சதிகார கும்பலை விரட்டி அடிப்பார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Edappadi ,DMK ,General Secretary ,Duraimurugan ,Chennai ,Congress alliance ,BJP ,Election Commission alliance… ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...