×

இரண்டு மடங்கு வெகுமதி வெனிசுலா அதிபரை பிடித்து கொடுத்தால் ரூ.450 கோடி பரிசு: அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி

நியூயார்க்: போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டின் பேரில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பிடித்து கொடுத்தால் ரூ.450 கோடி பரிசு வழங்குவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெனிசுலா நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் மீது, கடந்த 2020ம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் முதல் முறையாக அதிபராக இருந்தபோது, போதைப்பொருள் தீவிரவாதம் மற்றும் கொக்கைன் கடத்தல் சதித்திட்டம் ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் மன்ஹாட்டன் கூட்டாட்சி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, அவரைக் கைது செய்ய உதவுவோருக்கு ரூ.131 கோடி பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், ஜோ பைடன் நிர்வாகம் அந்தத் தொகையை ரூ.219 கோடியாக உயர்த்தியது.

இந்தத் தொகை, சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின்லேடனைப் பிடிக்க அமெரிக்கா அறிவித்த பரிசுத்தொகைக்கு நிகரானதாகும். இவ்வளவு பெரிய பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டபோதிலும், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் எதிர்ப்புகளையும் மீறி மதுரோ தனது பதவியில் நீடித்து வருகிறார். இந்நிலையில், வெனிசுலா அதிபர் மதுரோ, உலகின் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல்காரர்களில் ஒருவராகச் செயல்படுவதாகவும், போதைப்பொருள் கும்பல்களுடன் இணைந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருளை சப்ளை செய்வதாகவும் குற்றம் சாட்டி, அவரைக் கைது செய்வதற்கான பரிசுத்தொகையை இரண்டு மடங்காக, அதாவது ரூ.450 கோடியாக உயர்த்தி டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த தகவலை அமெரிக்க அட்டர்னி ஜெனரல் பாம் போண்டி அறிவித்தார்.

Tags : President ,US ,President Trump ,New York ,President Nicolas Maduro ,Nicolas Maduro ,
× RELATED மாணவர் அமைப்புத் தலைவர் சுட்டுக் கொலை:...