×

அரசு திட்டங்களில் தலைவர்கள் படம் உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு

புதுடெல்லி: தமிழ்நாட்டில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்த விளம்பரங்களில், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெற்றிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அரசு திட்டங்களில் அரசியல் தலைவர்களின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் பயன்படுத்த தடை விதிக்கக்கோரி அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி. சண்முகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருத்தார்.

மேற்கண்ட வழக்கு விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அமர்வில் கடந்த 1ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, ‘‘உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், அரசு விளம்பரங்களில் முதலமைச்சரின் புகைப்படத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படத்தையோ, முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படத்தையோ பயன்படுத்துவது உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு முரணானது.

மேலும் அரசு திட்டத்தின் பெயரில், அரசியல் தலைவர்களின் பெயர்களை பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. அதேபோல ஆளும் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்துவது உச்ச நீதிமன்றம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு விரோதமானது. எனவே, தமிழ்நாடு அரசு புதிதாக தொடங்க உள்ள மற்றும் அமலில் உள்ள திட்டங்கள் குறித்த விளம்பரங்களில் அரசியல் தலைவர்களின் பெயரையோ, முன்னாள் முதலமைச்சர்களின் புகைபடத்தையோ பயன்படுத்தக் கூடாது.

இருப்பினும் அரசு நலத்திட்டம் தொடங்குவதற்கும், அதனை செயல்படுத்துவதற்கும் எதிராக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று உத்தரவிட்டிருந்தனர். இந்த நிலையில் திமுக தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது தமிழ்நாடு அரசு தரப்பிலும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து மேற்கண்ட இரண்டு மனுவும் நாளை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது.

Tags : Government of Tamil Nadu ,Supreme Court ,New Delhi ,Stalin ,Tamil Nadu ,Chief Minister ,Karunanidhi ,Chief Mu. K. ,C. V. SANMUGAM ,CHENNAI HIGH COURT ,M. M. ,Srivastava ,Justice ,Sundar Mohan ,
× RELATED கடும் எதிர்ப்பை மீறி அமலுக்கு வந்தது...