×

கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழா; பொங்கல் வைத்தல் வைபவம் தொடங்கியது: நாளை உள்ளூர் விடுமுறை

 

* பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு

சேலம்: சேலம் கோட்டை மாரியம்மன் கோயில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு, பொங்கல் வைத்தல் வைபவம் இன்று தொடங்கியது. இதனையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் புகழ்பெற்ற பழமைவாய்ந்த கோட்டை பெரிய மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடத்தப்படும் ஆடித்திருவிழா பிரசித்திபெற்றது. அதன்படி நடப்பாண்டு ஆடித்திருவிழா கடந்த 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து 23ம் தேதி கொடியேற்றம், 29ம் தேதி கம்பம் நடுதல், 3ம் தேதி ஊஞ்சல் உற்சவமும், 4ம் தேதி சக்தி அழைப்பும் உள்ளிட்ட வைபவங்கள் சிறப்பாக நடந்தன. தொடர்ந்து இன்று காலை சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைத்தல் வைபவம் இன்று ெதாடங்கியது. காலை முதலே குடும்பத்துடன் வந்த பெண்கள், கோயில் வளாகத்தில் பொங்கல் வைத்தனர்.

இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, தங்க கவசம் சாத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்றிரவு விடிய, விடிய பக்தர்கள் ெபாங்கல் வைத்து அம்மனை வழிபட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கோயில் வளாகம் முழுவதும் நூற்றுக்கணக்கான அடுப்புகள் தயார்படுத்தி வைக்கப்பட்டுள்ளன. பக்தர்கள் கூட்ட நெரிசல் இன்றி பொங்கல் வைக்கவும், அம்மனை வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்யவும் பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் பொருட்டு மாவிளக்கு எடுக்கவும், உருளுதண்டம் போடவும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பக்தர்கள் ஆடு, கோழி ஆகியவற்றை பலியிட கோயிலுக்கு பின்புறம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேண்டுதல் நிறைவேற்றும் பக்தர்கள், பொதுமக்களுக்கு கூழ் வழங்க தனியாக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆடித்திருவிழாவை முன்னிட்டு நடப்பாண்டு முதன்முறையாக தேரோட்டம் நடக்கிறது. வரும் 8ம் தேதி காலையில் கோயிலின் முன்பு தேரோட்டம் தொடங்குகிறது. தொடர்ந்து வரும் 9ம் தேதி கூடுதுறை பவானி ஆற்றில் கம்பம் விடுதலும், 10ம் தேதி சப்தாபரணமும், 11ம் தேதி மஞ்சள் நீராட்டும், 12ம் தேதி பால்குடம் ஊர்வலம், மகாபிஷேகம், கணபதி ஹோமம், கொடியிறக்கமும், 13ம் தேதி மகாபிஷேகம், நைவேத்தியம், 15ம் தேதி சுதந்திரதின சிறப்பு வழிபாடும், சமபந்தி விருந்தும் நடக்கிறது. ஆடித்திருவிழாவை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாநகர காவல் துறை சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். இவர்களுடன் ஊர்காவல்படையினர், பள்ளி சாரண, சாரணியர் மாணவ, மாணவிகளும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள்.

ஏற்கனவே கோயில் வளாகத்தில் 70 சிசிடிவி கேமராக்கள் உள்ளன. தற்போது திருவிழாவின்போது குற்றசம்பவங்களை தடுக்க பொங்கல் வைக்கும் இடம், உருளுதண்டம் போடும் இடம், மொட்டை அடிக்கும் இடம், கோயில் ராஜகோபுரம், வெளியே செல்லும் வழி, மூலவர் அம்மன் முன்பு என பல இடங்களில் கூடுதலாக 60 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அவற்றை 24 நேரமும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதேபோல் சேலம் குகை மாரியம்மன், காளியம்மன், அம்மாப்பேட்டை செங்குந்தர் மாரியம்மன், நஞ்சம்பட்டி மாரியம்மன், காமராஜர் காலனி மாரியம்மன், பொன்னமாப்பேட்டை மாரியம்மன், சஞ்சீவிராயன்பேட்டை மாரியம்மன் என மாநகர் முழுவதும் உள்ள ஏராளமான கோயில்களில் ஆடித்திருவிழா களைகட்டியுள்ளது.

தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடு
ஆடித்திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் சிரமமின்றி அம்மனை தரிசனம் செய்ய சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டநெரிசலை கட்டுப்படுத்த இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுதரிசனம் செய்ய வரும் பக்தர்கள் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து கோயில் பின்புறமுள்ள வழியில் வரவேண்டும். அதேபோல் சிறப்பு தரிசனம் மற்றும் விஐபி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்காக தனிவரிசை அமைக்கப்பட்டுள்ளது. அம்மனை தரிசனம் செய்துவிட்டு அனைத்து பக்தர்களும் ராஜகோபுரம் வழியாக வெளியே செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் உருளுதண்டம் போடும் பக்தர்கள் கோயில் பின்புறமாக தனி வழியில் வந்து, தண்ணீர் தெளித்துவிட்டு உருளுதண்டம் போடலாம். தொடர்ந்து உருளுதண்டம் போட்டுவிட்டு குளிக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

Tags : Kota Mariyamman Temple Aaditra Festival ,Pongal Vaithal Vaibhavam ,Salem ,Salem Fort Mariamman Temple ,Pongal Vaithal Vaipavam ,Great Maryamman Temple ,Adiathila Festival ,Ikoil ,Aatithila Festival ,
× RELATED திருநெல்வேலியில் பொருநை...