×

உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களை தற்போதைய பெயரிலேயே தொடரக்கோரி தமிழக அரசு மனு: ஐகோர்ட்டில் வியாழக்கிழமை விசாரணை

 

சென்னை: உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் திட்டங்களை தற்போதைய பெயரிலேயே தொடர்ந்து செயல்படுத்த அனுமதிக்கக் கோரி அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஆகஸ்ட் 7ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதல்வரின் பெயரை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், அதிமுக வழக்கறிஞர் அணி தென் சென்னை வடக்கு கிழக்கு மாவட்ட செயலாளர் இனியன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், அரசுத் திட்டங்களின் பெயர்களில் வாழும் ஆளுமைகளின் பெயர்கள் பயன்படுத்த அனுமதிக்க முடியாது. திட்டம் தொடர்பான விளம்பரங்களில் முன்னாள் முதல்வர், கட்சியின் கொள்கை தலைவர்களின் புகைப்படங்கள் இடம் பெறக் கூடாது என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை மாற்றியமைக்கக் கோரி, தமிழக பொதுத்துறை செயலாளர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், மாநில முதல்வர், அரசியல் சாசன அதிகாரி என்பதால் அரசியல் ஆளுமை எனக் கருத முடியாது. முன்னாள் முதல்வர்களின் புகைப்படங்களை பயன்படுத்த உச்ச நீதிமன்றம் தடை விதிக்கவில்லை. உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் போன்ற திட்டங்கள் தொடங்கப்பட்டு விட்டதால், இரு திட்டங்களை தற்போதைய பெயரிலேயே தொடர அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.வஸ்தவா மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற இடைக்கால உத்தரவை எதிர்த்து திமுக தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனு, ஆகஸ்ட் 6ம் தேதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது என்று சி.வி.சண்முகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் முடிவுக்கு பின்பு தமிழக அரசின் மனுவை விசாரணைக்கு எடுக்கலாம் எனக் கூறி விசாரணையை ஆகஸ்ட் 7ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர். இதற்கிடையில், உயர் நீதிமன்ற தடையை மீறி, நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை அரசு தொடங்கியுள்ளதாகக் கூறி அரசுக்கு எதிராக, சி.வி.சண்முகம் தரப்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கும் ஆகஸ்ட் 7ம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : Tamil Nadu government ,Stalin ,Chennai ,High Court ,Madras High Court ,AIADMK ,minister ,C.V. Shanmugam ,South Chennai North East District ,Inian ,Chief Minister ,
× RELATED சென்னை பெசன்ட் நகர் கடற்கடையில்...