- வின்ஃபாஸ்ட்
- உற்பத்தி ஆலை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- இந்தியா
- முதல் அமைச்சர்
- எம்.கே. ஸ்டாலின்
- தூத்துக்குடி
- உற்பத்தி
- வின்ஃபாஸ்ட் மின்சார கார் உற்பத்தி ஆலை
- வியட்நாம்
- சிப்கேட் தொழில்துறை வளாகம்
தூத்துக்குடி: இந்தியாவின் வாகன உற்பத்தி தலைநகரம் தமிழ்நாடு என தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் அமைக்கப்பட்டுள்ள ‘வின்பாஸ்ட்’ எலக்ட்ரிக் கார் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தூத்துக்குடி அருகே சில்லாநத்தத்தில் ரூ.16 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் 400 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் தொழில் வளாகத்தில் வியட்நாமைச் சேர்ந்த ‘வின்பாஸ்ட்’ எலக்ட்ரிக் கார் உற்பத்தி தொழிற்சாலைக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். 17 மாதங்களில் உற்பத்தியை துவங்கியுள்ள இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை துவக்க விழா தூத்துக்குடி வின்பாஸ்ட் கார் ஆலை வளாகத்தில் நேற்று காலை நடந்தது. விழாவில் தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா வரவேற்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் வின்பாஸ்ட் எலக்ட்ரிக் கார் உற்பத்தி தொழிற்சாலையை துவக்கி வைத்து பேசியதாவது: இந்தியாவில் வாகன உற்பத்தியில் 40 சதவீதம் தமிழ்நாட்டில்தான் உற்பத்தியாகிறது. இந்தியாவின் வாகன உற்பத்தியிலும், மின்சார வாகனங்கள் உற்பத்தியிலும் தமிழ்நாடு தலைநகரமாக உள்ளது என்பதை நெஞ்சை நிமிர்த்தி தெரிவித்துக் கொள்கிறேன். ஸ்ரீபெரும்புதூரில் முதல் கார் தொழிற்சாலை தொடங்கப்பட்டது. 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் தூத்துக்குடியில் ரூ.16 ஆயிரம் கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி தொழிற்சாலை தொடங்கவும், 3 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கவும், வின்பாஸ்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதற்கு அடுத்த மாதமே சிப்காட் தொழிற்பேட்டையில் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கு உற்பத்தி 17 மாதங்களில் துவங்கப்பட்டுள்ளது.
இங்கு முதன்முதலாக ரூ.1500 கோடி முதலீடு செய்யப்பட்டு, ஆண்டுக்கு 50 ஆயிரம் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். தெற்காசியாவில் தமிழ்நாட்டில்தான் இவ்வளவு பெரிய முதல் மின்சார வாகன உற்பத்தி ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும். இது எனது கனவுத் திட்டமாகும். சென்னை, காஞ்சிபுரம், ஒசூரை தொடர்ந்து வளர்ந்து வரும் மோட்டார் வாகன உற்பத்தியின் மையமாக தூத்துக்குடி உருவெடுத்துள்ளது. 2024ம் ஆண்டு டாடா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார் தொழிற்சாலைக்கு ராணிப்பேட்டை மாவட்டத்தில் அடிக்கல் நாட்டினேன். இதன் மூலம் மின்சார வாகன உற்பத்தியின் தலைநகரமாக தமிழ்நாடு திகழ்கிறது.
உலக அளவில் தமிழ்நாட்டில் ஹூண்டாய், பிஎம்டபிள்யூ, ஓலா, டிவிஎஸ் போன்ற கார், இருசக்கர உற்பத்தி நிறுவனங்களை தொடர்ந்து தூத்துக்குடியில் மின்சார வாகன உற்பத்தி தொடரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு மேலும் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலைகளை கொண்டு வருவோம். வின்பாஸ்ட் குழுமம் மருத்துவம், பயோ தொழில்நுட்பம், நுகர்பொருள் உற்பத்தி ஆகியவற்றிலும் ஈடுபட்டுள்ளது. இந்த தொழில்களையும் தமிழ்நாட்டிற்கு தொடர்ந்து விரிவாக்கம் செய்ய வேண்டும். எல்லா தொழில்களும் தொடங்குவதற்கு உறுதுணையாக இருப்பதுடன் இந்த திராவிட மாடல் அரசு அனைத்து உதவிகளையும் செய்து தரும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக வின்பாஸ்ட் ஆசியா நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் பாம் சான் தாவ் நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். விழாவில் கனிமொழி எம்பி., அமைச்சர்கள் கீதா ஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், கேகேஎஸ்எஸ்ஆர்.ராமச்சந்திரன், தா.மோ.அன்பரசன், மனோ தங்கராஜ், தலைமைச் செயலாளர் முருகானந்தம், தொழில்துறை செயலாளர் அருண்ராய், தொழிற்துறை நிர்வாக இயக்குநர் தர்வேஸ் அகமது உள்ளிட்டோர் பங்கேற்றனர். வின்பாஸ்ட் துணை தலைமை செயல் அலுவலர் பிரகலாதன் திருப்பதி நன்றி கூறினார்.
* சென்னை இந்தியாவின் டெட்ராய்ட்
முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ‘‘தொழில்துறை அமைச்சர் டிஆர்பி.ராஜாவின் உழைப்புக்கு இந்த வின்பாஸ்ட்டே சாட்சியாக விளங்கிக் கொண்டிருக்கிறது. இ-வாகனங்கள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாகவும் மற்றும் நிலைத்தன்மை கொண்ட போக்குவரத்தை முன்னெடுக்கும் நிறுவனமாகவும் இருக்கும் வின்பாஸ்ட் நிறுவனத்திற்கு நன்றி. இந்தியாவின் மொத்த மின் வாகன உற்பத்தியில், 40 விழுக்காடு தமிழ்நாட்டில் இருந்துதான் உற்பத்தியாகிறது. தமிழ்நாடுதான், இந்தியாவின் வாகன உற்பத்தி மற்றும் மின் வாகன உற்பத்தியின் ‘கேப்பிட்டல்’. சென்னை தான் இந்தியாவின் டெட்ராய்ட்’’ என்று குறிப்பிட்டார்.
* உள்ளூர், உறுதியான வளர்ச்சி
இந்த கார் உற்பத்தி தொழிற்சாலையில் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற 200க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இங்கு பணியாற்றும் 80 முதல் 90 சதவீதம் பேர், தூத்துக்குடி மற்றும் பக்கத்து மாவட்டத்தினர். இதன் மூலம் உள்ளூருக்கான உறுதியான வளர்ச்சி நிறைவேறியுள்ளது. இதன் மூலம் சுற்றியுள்ள மாவட்டங்களும் பயன்பெறும்.
* இன்றைய நாள் பொன்னாள்
வின்பாஸ்ட் கார் தொழிற்சாலை தொடங்கப்பட்டதன் மூலம் தூத்துக்குடி மட்டுமல்ல; தமிழ்நாடும், தென் மாவட்டங்களும் மிகப்பெரிய வளர்ச்சி பெறும். இன்றைய நாள் தென் மாவட்டங்களின் பொன்நாள் என விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.
* முதல் காரில் மு.க.ஸ்டாலின் கையெழுத்து
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் உற்பத்தி தொழிற்சாலையை துவக்கி வைத்த முதல்வர் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டு தயாராக நிறுத்தி வைத்திருந்த கார்களையும் பார்வையிட்டார். முதல் கார் விற்பனையை ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த முதல்வரிடம், அமைச்சர் டிஆர்பி.ராஜா கையெழுத்திடுமாறு கேட்டுக் கொண்டார். இதை தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த காரில், ‘மு.க.ஸ்டாலின் 4.8.2025’ என எழுதி கையொப்பமிட்டார்.
* ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்கள் உற்பத்தி
வின்பான்ஸ்ட் நிறுவன தலைமை செயல் அலுவலர் பாம் சான் சாவ், பேசியதாவது: தூத்துக்குடியில் உற்பத்தியாகும் கார்கள் தெற்கு ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். முழுமையான உற்பத்தித் திறனுடன் செயல்படும்போது, 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 பேர் வரை உள்ளூர் தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பும், ஆயிரக்கணக்கான மறைமுக வேலைவாய்ப்பும் கிடைக்கும். ஆரம்பத்தில் இரண்டு உயர்தர எலக்ட்ரிக் எஸ்யூவி மாடல்களான விஎப் 7 மற்றும் விஎப் 6 ஆகிய கார்களின் கட்டமைப்பில் கவனம் செலுத்தும். இந்த ஆலையின் தொடக்க உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 50 ஆயிரம் வாகனங்கள் ஆகும். 2030க்குள் 10 லட்சம் வாகனங்கள் உற்பத்தி செய்யும்.
* ரூ.32,288 கோடி முதலீட்டில் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்
தூத்துக்குடியில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நேற்று நடந்தது. இதில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் 32,288.70 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீட்டில் 48,649 பேருக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 22 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தாகின.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இடம்பெற்ற சில முக்கியமான திட்டங்கள் விவரம்: ஆர்ஜிஇ நிறுவனம் – சிங்கப்பூரைச் சேர்ந்த செயற்கை இழை (மேன் மேட் பைபர்) உற்பத்தியில், உலகளவில் முன்னணி நிறுவனமான ஆர்ஜிஇ நிறுவனம், இந்தியாவிலேயே, முதன்முறையாக, தூத்துக்குடியில் உற்பத்தி ஆலை அமைத்திட முன்வந்துள்ளது. இத்திட்டத்தில், 4,953 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 1,065 பேருக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கப்படும். கேய்னஸ் சர்க்யூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் – தமிழ்நாட்டில் 4,995 கோடி ரூபாய் முதலீட்டில், 74 லேயர் பிசிபி, ஹெச்டிஎஸ் பிசிபி, பிளக்சிபிள் பிசிபி உற்பத்தி, உயர்செயல்திறன் லேமினேட்ஸ், கேமரா மாடுயூல் அசெம்பிளி, வயர் ஹார்னஸ் அசெம்ப்ளி போன்ற மேம்பட்ட மின்னணுவியல் உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டத்தினை அமைக்க உள்ளது.
இத்திட்டத்தின் மூலம் தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில் 4,700 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். மேலும், தூத்துக்குடி ஒரு எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி மையமாக (எலெக்ட்ரானிக்ஸ் கிளஸ்டர்) வளர்ச்சி பெறும்.
யீமாக் பிரைவேட் லிமிடெட் அன்ட் ஜ்யானுவ்ஸ் நிறுவனங்கள் இணைந்து தூத்துக்குடி மற்றும் பிற மாவட்டங்களில், மல்டிலேயர் பிசிபி, ஆர்டிலரி ஷெல்ஸ், ரேடார் சிஸ்டம்ஸ் மற்றும் நுகர்வோர் மின்னணு உதிரிபாகங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்ய உள்ளன. இத்திட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட முதலீடு 3,400 கோடி ரூபாய் மற்றும் உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு 7,600 பேர் ஆகும்.
சென்னை ராதா இன்ஜினியரிங் வர்க்ஸ் நிறுவனம் இந்திய ரயில்வேக்கு ரயில் பெட்டி உற்பத்திக்கான உதிரிபாகங்கள் மேற்கொள்ளும் முன்னணி நிறுவனமாகும். இந்நிறுவனம், தூத்துக்குடியில், கப்பல் கட்டுமானத்திற்கான உதிரிபாகங்கள் தயாரிக்க 1500 கோடி ரூபாய் உறுதி செய்யப்பட்ட முதலீட்டில், ஒரு உற்பத்தி ஆலையை நிறுவன முன்வந்துள்ளது. சக்தி குழுமம் வெடிபொருள், உந்துசக்தி உற்பத்தி மற்றும் பரிசோதனை ஆலையை தூத்துக்குடியில் அமைக்க முன்வந்துள்ளது. 5000 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். இந்த ஆலை நிறுவப்படுவதன் மூலம், தூத்துக்குடி மாவட்டத்தில் பாதுகாப்புத் துறை சார்ந்த உற்பத்தி மேலும் வலுப்படும்.
Ethereal Exploration Guild விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனம், தூத்துக்குடியில் நடுத்தர வகை ராக்கெட் இன்ஜின்கள் உற்பத்தி மற்றும் சோதனை செய்வதற்கான புதிய ஆலையை அமைக்க உள்ளது. இதன்மூலம், விண்வெளித் துறையில் தூத்துக்குடி ஒரு முக்கிய மையமாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. Hwaseung Enterprise தென் கொரியாவைச் சேர்ந்த தோல் அல்லாத காலணி உற்பத்தியில் முன்னணி நிறுவனமான Hwaseung நிறுவனம், 1720 கோடி ரூபாய் உறுதியளிக்கப்பட்ட முதலீடு மற்றும் 20,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் ஒரு உற்பத்தி நிறுவனம் அமைக்க முன்வந்துள்ளது. Mobius Energy நிறுவனம் 1000 கோடி ரூபாய் உறுதி செய்யப்பட்ட முதலீட்டில், தேனி மாவட்டத்தில் சோலார் செல்கள் மற்றும் மாட்யூல்கள் உற்பத்தி ஆலை நிறுவிட முன்வந்துள்ளது.
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை சார்பில், 265.15 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 1196 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், 19 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
1. சியோரா மரைன் பி லிட் தூத்துக்குடி உணவு பதப்படுத்துதல்
2. ஸ்ரீமதி சால்ட் பி லிட் தூத்துக்குடி உணவு பதப்படுத்துதல்
3. கணேஷ் ராஜா ஆர்கனைசேஷன் பி லிட் தூத்துக்குடி உணவு பதப்படுத்துதல்
4. கடலையூர் மேட்ச் கம்பெனி தூத்துக்குடி பொது உற்பத்தி
5. சூர்யா மேட்ச் இண்டஸ்டிரிஸ் தூத்துக்குடி பொது உற்பத்தி
6. ஆன்ட்ரா ரெசிடென்சி தூத்துக்குடி விருந்தோம்பல்
7. எவரெஸ்ட் கிளாஸ் அண்ட் பிளைவுட் பேக்டரி இராமநாதபுரம் பொது உற்பத்தி
8. லா பாமேரா ரெசார்ட் இராமநாதபுரம் விருந்தோம்பல்
9. விவிஎம் பியூஎப் இண்டஸ்டிரிஸ் திருநெல்வேலி பொது உற்பத்தி
10. டெபோரா டெக்னாலஜிஸ் எல்எல்பி திருநெல்வேலி இரசாயனம்
11. முகில் மாடர்ன் ரைஸ் மில் திருநெல்வேலி உணவு பதப்படுத்துதல்
12. சாத்தூர் வெங்கடேஸ்வரா பேப்பர் மில்ஸ் பி லிட் திண்டுக்கல் பொது உற்பத்தி
13. ஸ்ரீ விநாயகா அக்ரோ மேனுபாக்சரிங் அண்ட் பிராசசிங் இண்டஸ்டிரி திண்டுக்கல் உணவு பதப்படுத்துதல்
14. ஹாரிசன் பிவரேஜஸ் திண்டுக்கல் உணவு பதப்படுத்துதல்
15. இன்பசேகர் பிளை ஆஸ் பிரிக்ஸ் மதுரை பொது உற்பத்தி
16. ராஜராஜேஸ்வரி கிராப்ட்ஸ் பி லிட் விருதுநகர் பொது உற்பத்தி
17. எம்டிசி பாலிமர்ஸ் அண்ட் பேக்கேஜிங் விருதுநகர் பொது உற்பத்தி
18. ஆதி பிஸ்நெட் கன்னியாகுமரி பொது உற்பத்தி
19. முருங்கை மார்க்கெட் லிங்கேஸ் இனிசியேட்டிவ் பல மாவட்டங்களில் உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட மொத்தம் 41 முக்கிய திட்டங்கள் குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
