×

நிர்வாகத்தை கைப்பற்ற அவசர சட்டம் கிருஷ்ணர் கோயில் வழக்கில் உபி அரசுக்கு கடும் கண்டனம்: உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவனில் ஸ்ரீ பான்கே பிஹகாரி கிருஷ்ணர் கோயில் அமைந்துள்ளது. பழமையான இக்கோயிலை நிர்வகிப்பதில் இருதரப்பினர் இடையே பிரச்னை நிலவி வருகிறது. இதற்கிடையே பக்தர்கள் வசதிக்காக கோயிலில் வழித்தடத்தை அமைக்க உபி அரசு முன்வந்தது. இதற்காக 5 ஏக்கர் நிலத்தை வாங்கி கோயில் பணத்தில் ரூ.262.5 கோடியை எடுத்துக் கொள்ள அனுமதி கோரி உபி அரசு தரப்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் கோயில் பணத்தை எடுக்க உயர் நீதிமன்றம் தடை விதித்து, நிர்வாக ரீதியான சிக்கலை தீர்க்க வழக்கறிஞர் ஒருவரை நீதிமன்றம் நியமித்தது.

இதற்கிடையே, இந்த விவகாரம் எதையும் தெரிவிக்காமல் உச்ச நீதிமன்றத்தை உபி அரசு நாடி உள்ளது. அதில் வழித்தடம் அமைக்க அனுமதிக்குமாறு கூறி உள்ளது. கடந்த மே 15ம் தேதி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் கோயில் பணத்தை வழித்தடம் அமைக்க பயன்படுத்த அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து கோயில் நிர்வாகத்தை முழுமையாக கட்டுப்படுத்த உபி அரசு அறக்கட்டளை அமைக்க கடந்த மே 26ம் தேதி அவசர சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதை எதிர்த்து கோயில் நிர்வாகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சூரிய காந்த், ஜோய்மல்யா முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போதுதான், நிர்வாக பிரச்னை குறித்து நீதிபதிகளுக்கு தெரியவந்தது. இதனால் கடும் கோபமடைந்த நீதிபதிகள், ‘‘உபி அரசு ஏன் ரகசியமான முறையில் உச்ச நீதிமன்றத்தை நாடியது. கோயில் நிர்வாகம் தொடர்பான பிரச்னை இருக்கையில் அது தொடர்பானவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமல்லவா? அதை அரசு மறைத்தது ஏன்? கோயில் நிர்வாகத்தை கைப்பற்ற அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டிய அவசரம் என்ன? அரசு பணத்தில் வழித்தடம் அமைக்க உபி அரசை யார் தடுத்தார்கள்?’’ என பல கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், மே 15ம் தேதி உத்தரவை நிறுத்தி வைத்து, நிர்வாக பிரச்னையை தீர்க்கும் வரை ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கமிட்டி அமைக்க உத்தரவிட்டனர். மேலும், அவசர சட்டம் குறித்து உயர் நீதிமன்றம் பரிசீலனை செய்யும் என்றும் உத்தரவிட்டனர்.

Tags : UP government ,Krishna ,Supreme Court ,New Delhi ,Sri Banke Bihari Krishna ,Brindavan ,Mathura, Uttar Pradesh ,Allahabad High Court ,High Court ,
× RELATED அசாமில் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒரு...