×

நேபாளத்தில் சோகம்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 4 இந்தியர்கள் பரிதாப சாவு

காத்மண்டு: நேபாளத்தில் பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 4 இந்தியர்கள் பரிதாபமாக இறந்தனர். இதுபற்றி தீவிர விசாரணை நடந்து வருகிறது. பீகார் மாநிலத்தில் இருந்து நேபாளத்தின் காத்மண்டுவுக்கு 5 பேர் காரில் சென்றனர். இன்று அதிகாலை நேபாளத்தின் மஹ்மதி மாகாணம் சிந்தூலி மாவட்டத்தில் உள்ள மலைப்பாங்கான பகுதியில் சென்றபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், அங்குள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணித்த 4 இந்தியர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார். விபத்து குறித்து தகவலறிந்ததும் சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினரால் உடனடியாக செல்ல முடியவில்லை. ராணுவத்தின் உதவியை நாடினர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு ராணுவத்தினர் விரைந்தனர். அவர்களது உதவியுடன் மீட்பு நடவடிக்கை துரிதமாக நடந்தது. படுகாயமடைந்தவர் அதே பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாவட்ட எஸ்.பி., ராஜ்குமார் சில்வால் கூறுகையில், ‘விபத்து நிகழ்ந்த பகுதிக்கு செல்லவே ஒரு மணி நேரமானது. நேபாள ராணுவத்தினரின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டோம். இதில் 4 பேர் பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் விவரங்களை இதுவரை கண்டறிய முடியவில்லை. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். உயிரிழந்தோர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இந்திய வெளியுறவு துறையிடம் நேபாள அரசு தகவல் கொடுத்துள்ளது.

The post நேபாளத்தில் சோகம்: பள்ளத்தாக்கில் கார் கவிழ்ந்து 4 இந்தியர்கள் பரிதாப சாவு appeared first on Dinakaran.

Tags : Nepal ,Indians ,KATHMANDU ,Bihar… ,Dinakaran ,
× RELATED 4வது முறையாக நம்பிக்கை ஓட்டு கோரும் நேபாள பிரதமர்