×

நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் ரயில்வே கேட்டில் லாரி மோதி விபத்து: நாகர்கோவில் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு

நெல்லை: நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் ரயில்வே கேட்டில் லாரி மோதி ஏற்பட்ட விபத்தால் உயர்மின் அழுத்த மின்சாரக்கம்பி துண்டிக்கப்பட்டு ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த தெற்கு வள்ளியூர் ரயில்வே கேட்டில் இன்று லாரி மோதியதில் தண்டவாளத்தின் மேல் சென்ற 25 ஆயிரம் வோல்ட்டேஜ் மின்சார ஒயர் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில்வே மார்க்கமாக திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் ரயில் பாதையில் ரயில் போக்குவரத்து தற்போது பாதிக்கப்பட்டுள்ளது. தெற்கு வள்ளியூர் வழியாக ராதாபுரம் மற்றும் கூடங்குளம் பகுதிகளில் செயல்பட்டு கொண்டிருக்கும் கல்குவாரிகளில் இருந்து ஏராளமான லாரிகள் கன்னியாகுமரி மற்றும் கேரளா பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது ரயில்வே கேட்டில் ரயில் ஒன்று செல்வதற்காக ரயில்வே கேட் மூடப்பட்டு பின் திறக்கப்பட்டது. ரயில்வே கேட் திறக்கப்பட்டதும் கல் ஏற்றி கொண்டு குவாரியை நோக்கி சென்ற லாரி முந்தி செல்ல முயன்ற போது எதிர்பாராத விதமாக ரயில்வே கேட்டில் இடித்தது. இதனால் தண்டவாளத்தின் உயரத்தில் செல்லும் சுமார் 25 ஆயிரம் வோல்ட் மின்சார ஒயர் மீது ரயில்வே கேட் மோதியதினால் அதிக மின்னழுத்தம் கொண்ட ஒயர் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் நாகர்கோவில் செல்லும் அந்தியோத்தியா எக்ஸ்பிரஸ், நெல்லை ரயில் நிலையத்தில் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நெல்லையிலிருந்து நாகர்கோவிலுக்கு சுமார் 12 மணி அளவில் செல்லக்கூடிய ரயிலும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மின் ஒயரை சரிபார்க்கும் பணிகள் துரித வேகத்தில் நடைபெற்றால் மட்டுமே மாலையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், அனந்தபுரி எக்ஸ்பிரஸ், அயோத்யா எக்ஸ்பிரஸ் ஆகியவை இந்த மார்க்கமாக சென்னை செல்ல வேண்டிய நிலை உள்ளது.எனவே அதிகாரிகள் தற்போது இந்த மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post நெல்லை மாவட்டம் தெற்கு வள்ளியூரில் ரயில்வே கேட்டில் லாரி மோதி விபத்து: நாகர்கோவில் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : South Valliyur ,Nellai district ,Nagercoil ,Nellai ,Valliyur ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டிற்கு கேரள கழிவுகள்...