×

மாணவிகளின் தாலியை கூட விடாத நீங்கள், இந்தியாவில் இல்லாத மாணவருக்கு நீட் தேர்வு எழுத அனுமதித்தது ஏன்?: என்டிஏ-வுக்கு ஐகோர்ட் கண்டனம்!!

மதுரை: 2019 நீட் தேர்வு மோசடியில் குற்றவாளிகளின் ஆவணங்களை வழங்க மறுப்பது ஏன்? என தேசிய தேர்வு முகமைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேர்ச்சி பெற்ற சென்னையை சேர்ந்த மாணவர்கள் தேனி மருத்துவ கல்லூரியில் சேர்ந்து படித்து வந்தது தெரியவந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த மோசடி குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணையின் போது பல்வேறு மாணவர்கள் ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது தெரியவந்தது.

இதையடுத்து இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சென்னையை சேர்ந்த மாணவர் உதித், சூரியா உள்ளிட்ட சில மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் தேர்வுக்கு உடந்தையாக செயல்பட்ட தரகர்கள் என 21 நபர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், குற்றவாளியாக உள்ள தன்னை விடுவிக்குமாறு சென்னையை சேர்ந்த தருண் மோகன் என்பவர் உயநீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். இந்த வழக்கானது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகி, நீட் தேர்வு மோசடி வழக்கில் தேசிய தேர்வு முகமை இதுவரை எந்த தகவலையும் தரவில்லை என தெரிவித்தார். தேசிய தேர்வு முகமை தரப்பில் ஒன்றிய அரசின் வழக்கறிஞர் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரினார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி புகழேந்தி; வழக்குப்பதிவு செய்து 5 வருடமாகியும் இன்னும் கால அவகாசம் கேட்பது ஏன்? என்றும், இந்தியாவிலேயே இல்லாத மாணவனுக்கு 3 மாநிலங்களில் தேர்வு எழுத அனுமதி அளிக்கப்பட்டது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். ஆனால், தமிழ்நாட்டில் நீட் தேர்வு எழுத மாணவிகளின் தாலியை கூட கழற்றிச் சோதனை செய்த பின்னரே தேர்வு எழுத அனுமதி அளிக்கப்படுகிறது என்று நீதிபதி புகழேந்தி காட்டமாக தெரிவித்தார். மேலும், சிபிசிஐடி கோரிய நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் ஆவணங்களை இதுவரை வழங்கவில்லை ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, இதன்மூலம் நீட் ஆள்மாறாட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக தேசிய தேர்வு முகமை செயல்படுவது போல் தெரிகிறது என கூறினார்.

நீட் தேர்வு முறைகேட்டில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் வீடு, அலுவலகங்களில் ஏன் சோதனை நடத்த உத்தரவு பிறப்பிக்க கூடாது என கேள்வி எழுப்பிய நீதிபதி, இந்த நிலை தொடர்ந்தால் அவர்களை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார். இறுதியாக இந்த வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் வரும் செவ்வாய் கிழமை தாக்கல் செய்வதாக தேசிய தேர்வு முகமை கால அவகாசம் கோரிய நிலையில், வழக்கின் விசாரணையை செவ்வாய் கிழமைக்கு ஒத்திவைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

 

The post மாணவிகளின் தாலியை கூட விடாத நீங்கள், இந்தியாவில் இல்லாத மாணவருக்கு நீட் தேர்வு எழுத அனுமதித்தது ஏன்?: என்டிஏ-வுக்கு ஐகோர்ட் கண்டனம்!! appeared first on Dinakaran.

Tags : India ,ICourt ,Madurai ,High Court ,National Examination Agency ,Chennai ,
× RELATED அலங்கார நுழைவாயில்களை...