×

நவராத்திரி வழிபாடு முறைகள்.. அம்மனுக்கு நவ வித அலங்காரங்கள்!!

இந்தியாவில் மிகவும் விமரிசையாக ஒன்பது நாட்களுக்குக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது நவராத்திரி என்னும் அம்பிகை வழிபாட்டு பண்டிகையாகும். முக்கியமாக, தமிழ்நாட்டில் இந்த நவராத்திரி பண்டிகை மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. வீடுகளில் பொம்மை கொலு அழகாக ஒற்றைப்படை வரிசையில் படி கட்டி வைப்பார்கள். பண்டிகையின் முதல் நாளான மகாளய அமாவாசையை அடுத்த பிரதமை தினத்தன்று ஒரு கலசத்தில் அம்பிகையை ஆவாஹனம் செய்து அதையும் கொலுவில் வைத்து தினசரி இரண்டு வேளை விமரிசையாக பூஜை செய்வார்கள்.

எங்கெங்கோ வசிக்கும் உறவுமுறைகளையும் இந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கு அழைத்து தாம்பூலம் கொடுப்பார்கள். இந்த நிகழ்வின்போது பாடத் தெரிந்தவர்கள் பாடுவார்கள். பெண் குழந்தைகளை வீட்டுக்கு வரவழைத்து அவர்களுக்கு புதுத்துணி வாங்கிக் கொடுக்கும் வழக்கமும் சில வீடுகளில் உண்டு. நவராத்திரியை மூன்றாகப் பிரித்து முதல் மூன்று நாட்கள் துர்கைக்கும் அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும் கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் வழிபாடு நடத்தப்படுகிறது. இதில் ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு ஒவ்வொரு விதமாக அலங்காரம் செய்யப்படுகிறது.

முதல்நாள்
அலங்காரம்: மகேஸ்வரி. (மது, கைடபர் என்னும் அசுரர்களை வதம் செய்வது போல்)
கன்னி பூஜை: இரண்டு வயது சிறுமியை குமாரி என்னும் அம்பிகையாக பாவித்து வணங்குதல்.
கோலம்: அரிசி மாக்கோலம் அல்லது பொட்டுக் கோலம்
பூக்கள்: மல்லிகை, செவ்வரளி, வில்வ மாலை
நைவேத்யம்: வெண்பொங்கல், சுண்டல், பழம், எலுமிச்சை சாதம், தயிர் சாதம், மொச்சை, பருப்பு வடை.
இன்றைய வழிபாட்டின் பலன் செல்வ வளம் பெருகுதல், ஆயுள் பெருகி தீர்க்காயுசாக விளங்குதல்.

இரண்டாம் நாள்
அலங்காரம்: ராஜராஜேஸ்வரி (மகிஷாசுரனை வதம் செய்வது போல்)
கன்னி பூஜை: மூன்று வயது சிறுமியை கவுமாரியாக பாவித்து வழிபடுதல்
கோலம்: கோதுமை மாக்கோலம்
பூக்கள்: முல்லை, துளசி, சாமந்தி, சம்பங்கி மாலை
நைவேத்யம்: தயிர்வடை, வேர்க்கடலை, சுண்டல், எள்சாதம், புளியோதரை
இன்றைய வழிபாட்டின் பலன் நோய் தீரும், உடல் ஆரோக்கியம் பெருகும்.

மூன்றாம் நாள்
அலங்காரம்: வராகி (பன்றி முகம் கொண்டவள்)
கன்னி பூஜை: நான்கு வயது சிறுமியை அம்பிகையாக பாவித்து வணங்குதல்
கோலம்: மலர்க்கோலம்
பூக்கள்: செண்பக மலர் மாலை.
நைவேத்யம்: கோதுமை பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காராமணி (தட்டாம்பயறு) சுண்டல்
இன்றைய வழிபாட்டின் பலன் குறையில்லாத வாழ்வு அமையும்.

நான்காம் நாள்
அம்பிகை: மகாலட்சுமி சிம்மாசனத்தில் அமர்ந்த கோலம்
பூஜை: ஐந்து வயது சிறுமியை ரோகிணியாக பூஜித்தல்
கோலம்: அட்சதை கோலம்
பூக்கள்: செந்தாமரை, ரோஜா மாலை
நைவேத்யம்: அவல், கேசரி, பால் பாயாசம், கல்கண்டு சாதம், பட்டாணி சுண்டல்
இன்றைய வழிபாட்டின் பலன் கடன் தொல்லை தீரும்.

ஐந்தாம் நாள்
அலங்காரம்: மோகினி வடிவம்
கன்னி பூஜை: ஆறு வயது சிறுமியை வைஷ்ணவியாக வழிபடுதல்
கோலம்: கடலைமாவு கோலம்
பூக்கள்: கதம்பம், மரிக்கொழுந்து மாலை
நைவேத்யம்: பால்சாதம், பூம்பருப்பு சுண்டல், பாயாசம், சர்க்கரைப் பொங்கல்
இன்றைய வழிபாட்டின் பலனாக வேண்டும் விருப்பங்கள் நிறைவேறும்.

ஆறாம் நாள்
அலங்காரம்: சண்டிகா தேவி, சர்ப்ப (பாம்பு) ஆசனத்தில் வீற்றிருப்பது போல்.
கன்னி பூஜை: ஏழு வயது சிறுமியை காளிகாம்பாளாக எண்ணி வழிபடுதல்
கோலம்: கடலை மாவு கோலம்
பூக்கள்: மரிக்கொழுந்து, செம்பருத்தி, சம்பங்கி மாலை.
நைவேத்யம்: தேங்காய் சாதம், பழவகை, பாசிப்பயறு சுண்டல்
இன்றைய வழிபாட்டின் பலனாக கவலைகள் தீரும், வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.

ஏழாம் நாள்
அல்ஙகாரம்: சாம்பவி துர்க்கை, பீடத்தில் அமர்ந்திருப்பது போல்.
பூஜை: எட்டு வயது சிறுமியை பிராஹ்மியாக நினைத்து வழிபடுதல்
கோலம்: மலர்க்கோலம்
பூக்கள்: மல்லிகை, முல்லை மாலை
நைவேத்யம்: எலுமிச்சை சாதம், வெண்பொங்கல், கொண்டைக்கடலை சுண்டல், முந்திரி பாயாசம், புட்டு
இன்றைய வழிபாட்டின் பலனாக ஒருவருக்கு விரும்பிய வரம் கிடைக்கும்.

எட்டாம் நாள்
அம்பிகை: நரசிம்ம தாரிணி, சிங்க முகத்துடன் அலங்கரித்தல்
பூஜை: 9 வயது சிறுமியை கவுரியாக வணங்குதல்
திதி: அஷ்டமி
கோலம்: தாமரை மலர்க்கோலம்
பூக்கள்: வெண்தாமரை, சம்பங்கி மாலை
நைவேத்யம்: பால்சாதம், தேங்காய் சாதம், புளியோதரை, மொச்சை.
இன்றைய வழிபாட்டின் பலனாக பிள்ளைகள் நற்பண்புகளுடன் வளர்வார்கள்.

ஒன்பதாம் நாள்
அம்பிகை: பரமேஸ்வரி, திரிசூலம் ஏந்தியது போல் அலங்கரித்தல்
பூஜை: பத்து வயது சிறுமியை சாமுண்டியாக வழிபடுதல்
கோலம்: வாசனைப் பொடிக்கோலம்
பூக்கள்: துளசி, மல்லிகை, பிச்சி, தாமரை, மரிக்கொழுந்து மாலை
நைவேத்யம்: உளுந்து வடை, சர்க்கரைப் பொங்கல், எள் சேர்த்த பாயாசம், கேசரி, எள் உருண்டை
இன்றைய வழிபாட்டின் பலனாக குடும்பம் மட்டுமல்ல, நாடும் நலம் பெறும்.

பத்தாம் நாள் விஜயதசமி: நவராத்திரி பூர்த்தியாகும் நாள். இன்று அம்பிகையை பார்வதியின் வடிவாக அலங்கரிக்க வேண்டும். மலர்க்கோலம் போட வேண்டும். பல விதமான மலர் மாலைகளால் அலங்கரிக்கலாம். இந்த வழிபாட்டின் பலனாக சகல சௌபாக்கியங்களையும் அடையலாம்.

நவராத்திரி தினங்களில் சிவன் கோயில், அம்மன் கோயில்களுக்குச் சென்றால் கண்டிப்பாக ஒவ்வொரு நாளும் இவ்வாறு நவ விதமாக அம்பாளை அலங்கரிப்பதை தரிசிக்கலாம். நவராத்திரி பண்டிகை அக்கம் பக்கத்திலுள்ளவர்களை பழக்கப்படுத்திக் கொள்ளவும், உறவுகளைப் பேணவும் உதவும் ஒரு சிறந்த கலாசார நிகழ்வாக நவராத்திரி பண்டிகை அனுசரிக்கப்படுகிறது.

The post நவராத்திரி வழிபாடு முறைகள்.. அம்மனுக்கு நவ வித அலங்காரங்கள்!! appeared first on Dinakaran.

Tags : Navratri ,India ,Tamil Nadu ,
× RELATED சொல்லிட்டாங்க…