×

நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.1.50 கோடியில் 5 இடங்களில் சுகாதார நல உதவி மையம்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சியில் தலா ரூ.30 லட்சம் செலவில் 5 இடங்களில் சுகாதார நல உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான இடம் தேர்வு பணி ஆணையர் தலைமையில் நடக்கிறது. தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் சுகாதார திட்டங்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கிராமப்புற மற்றும் மலையோர பகுதி மக்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகள் எளிதில் கிடைக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே நடமாடும் மருத்துவக்குழுக்கள், மினி கிளினிக் உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளன. இது தவிர ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த கட்டமாக தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இங்கு ஒரு செவிலியர் பணியமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் சிகிச்சை பெற தேவையான வசதிகள் செய்யப்படும்.

அந்த செவிலியர் தங்குவதற்கான குடியிருப்பு வசதியும் அதே இடத்தில் அமைத்து கொடுக்கப்படும். அந்த வகையில் நாகர்கோவில் மாநகராட்சியில் தற்போது வடசேரி, கிருஷ்ணன்கோவில், வடிவீஸ்வரம், தொல்லவிளை உள்பட 5 இடங்களில் நகர்ப்புற சுகாதார மையங்கள் உள்ளன. இவற்றை உள்ளடக்கிய பகுதிகளில் மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதற்கான இடம் தேர்வு பணி தற்போது மாநகராட்சி ஆணையர் ஆனந்தமோகன் தலைமையில் நடந்து வருகிறது. செவிலியர் குடியிருப்பு அமைப்பதற்கான இடம், குடியிருப்புகள் எண்ணிக்கை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, உதவி மருத்துவ மையம் அமைக்கப்பட உள்ளது. அதன் ஒரு கட்டமாக இன்று காலை நாகர்கோவில் மாநகராட்சி 4 வது வார்டுக்குட்பட்ட திரட்டு தெருவில், ஆணையர் ஆனந்தமோகன் ஆய்வு செய்தார்.

அவருடன் மாநகர நகர் நல அலுவலர் டாக்டர் ராம்குமார், இன்ஜினியர் பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட அதிகாரிகளும் இருந்தனர். மாநகர திமுக இளைஞரணி செயலாளர் சி.டி. சுரேஷ் உள்ளிட்ட நிர்வாகிகளும் உடன் இருந்தனர். திரட்டு தெருவில், பயன்பாடற்ற நிலையல் பொது கழிப்பறை உள்ளது. எனவே அந்த கழிப்பறை கட்டிடத்தை அகற்றி விட்டு அங்கு செவிலியர் குடியிருப்பு அமைத்து, மருத்துவ உதவி மையம் ஏற்படுத்தலாமா? என்பது பற்றி ஆலோசிக்கப்பட்டது. ஏற்கனவே இந்த பயன்பாடற்ற கழிவறை கட்டிடத்தை அகற்றி தருமாறு அந்த பகுதி பொதுமக்கள் சார்பில், மாநகராட்சிக்கு மனு அளித்துள்ளனர். இரவு நேரங்களில் இந்த கட்டிடத்தில் சமூக விரோத கும்பல்கள் அட்டூழியம் செய்து வருகிறது. பகல் நேரங்களில் பல்வேறு விரோத செயல்கள் நடக்கின்றன. எனவே இந்த கட்டிடத்தை அகற்ற வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் ஆணையரிடம் கூறினர்.

இது குறித்து ஆணையர் ஆனந்தமோகனிடம் கேட்ட போது, நாகர்கோவில் மாநகராட்சியில் தலா ரூ.30 லட்சம் செலவில் 5 சுகாதார நல உதவி மையம் அமைக்கப்பட உள்ளது. இந்த உதவி மையத்தில் செவிலியர் ஒருவர் தங்கி இருந்து மருத்துவ ஆலோசனைகள் மற்றும் காய்ச்சல் உள்ளிட்ட சிறு, சிறு உடல் நல பிரச்சினைகளுக்கு சிகிச்சை அளிப்பார். மேலும் அந்த பகுதியில் உள்ள கர்ப்பிணிகளுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள், மருத்துவ உதவிகளையும் வழங்குவார். இதன் மூலம் எளிதில் மக்கள் மருத்துவ வசதியை சென்றடையும். தற்போது எந்தெந்த இடங்களில் சுகாதார நல உதவி மையம் அமைக்கலாம் என்பது பற்றி ஆய்வு நடக்கிறது. மேயர் மகேசுடன் கலந்தாலோசனை செய்து, இடம் தேர்வு செய்யப்பட்டு பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.

The post நாகர்கோவில் மாநகராட்சியில் ரூ.1.50 கோடியில் 5 இடங்களில் சுகாதார நல உதவி மையம் appeared first on Dinakaran.

Tags : Health Welfare Assistance Centre ,Nagargo ,Health Welfare Assistance ,Health Welfare Assistance Center ,Nagarko ,Dinakaran ,
× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை வாலிபருக்கு 5 ஆண்டு ஜெயில்