நவராத்திரி என்றாலே கொலுப்படிகள். அதில் அழகாக வீற்றிருக்கும் பொம்மைகள்தான் நம் நினைவிற்கு வரும். நமக்குப் பிடித்த அனைத்து கடவுள்களின் சிலைகளையும் ஒவ்வொரு படிக்கெட்டிலும் வைத்து அலங்கரித்து ஒன்பது நாட்கள் பூஜித்து வழிபடுவதுதான் நவராத்திரி. வீட்டில் கொலு வைத்தால் ஐஸ்வர்யம் என்பது ஐதீகம். கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்க காரணம், மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது. கொலு வைப்பதற்காக கடவுள் மற்றும் இதர பொம்மைகளை வாங்கும் போது அதனை அப்படியே பத்திரமாக எடுத்து வைத்து, ஒவ்வொரு வருடமும் கொலு வைக்கும் போது பயன்படுத்துவது என்பது இன்று வரை நாம் கடைப்பிடிக்கும் பழக்கமாக இருந்து வருகிறது.
ஆனால் ஒவ்வொரு வருடமும் புதுவித அவதாரத்தில் கடவுள் பொம்மைகள் அறிமுகமாகிக் கொண்டே இருக்கும். அதனை பார்க்கும் போது வாங்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்படும். அதே பொம்மை ஏற்கனவே இருந்தாலும் வருடா வருடம் வரும் கொலு பண்டிகைக்கு புதுவிதமான பொம்மைகள் வாங்குவதை மட்டும் மக்கள் தவிர்ப்பதில்லை. இவர்களுக்காகவே பலவிதமாக கடவுள் பொம்மைகளையும், உருவங்களையும் அழகாகவும் மிகவும் கலைநேர்த்தியோடும் செய்து கொடுத்து வருகிறது மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலின் அருகில் இருக்கும் நற்பவி என்ற சிறப்பு பொம்மை கடை. கடை முழுக்கவும் கடவுள் பொம்மைகள் பெரிதும் சிறிதுமாக வைத்திருக்க கடையை பார்க்கும் போது பொம்மைகளின் அருங்காட்சியகம் போல காட்சியளிக்கிறது.
அது குறித்து கடையின் உரிமையாளர் வினோத் பாலாஜியிடம் பேசும் போது, ‘‘நற்பவி தொடங்கி இரண்டு வருடமாகிறது. நற்பவி என்றால் மக்கள் எல்லோருக்கும் நல்லது உண்டாகட்டும் என்று பொருள். ஆரோக்கியம், ஆனந்தம், ஐஸ்வர்யம் என்ற வரிகளை மையமாக வைத்து தான் இந்தக் கடையை தொடங்கினேன். வீட்டில் கொலு வைத்து வழிபட்டால் ஆனந்தமாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பார்கள். அவர்களுடைய வீட்டில் ஐஸ்வர்யம் உண்டாகும் என்பது ஐதீகம். கொலு வைப்பதற்காக பலரும் பலவிதமான கடவுள் சிலைகளை வாங்குவதற்காக பல கடைகளுக்கு செல்வார்கள். இதில் கடவுள்களின் முக லட்சணம்தான் முக்கியமாக பார்ப்பார்கள். அதில் பலருக்கும் திருப்தி இருக்காது. பல கடைகளில் நிறைய பொம்மைகள் இருக்கும். ஆனால் அதன் முக அமைப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். ஆனால் நான் அதில் ரொம்பவே கவனமாக இருக்கிறேன்.
இந்தியா முழுவதும் உள்ள பல பொம்மைகள் செய்யும் கலைஞர்களிடம் இருந்து தான் நான் கொலு பொம்மைகளை வாங்கி விற்பனை செய்கிறேன். எங்கள் கடையில் இருக்கும் கொலு பொம்மைகளின் வடிவங்கள் அனைத்தும் துல்லியமான வேலைப்பாடுகளும், முக அமைப்பும் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கும். அதற்காக பல ஊர்களில் இருந்து பொம்மைகளை வாங்குவதற்காக இங்கு வருகிறார்கள். வருடத்தில் 365 நாட்களும் எங்களிடம் கொலு பொம்மைகள் கிடைக்கும். இது தவிர காதி உடைகளும், பூஜை பொருட்களும், வீட்டை அலங்கரிக்கும் பொருட்கள் என எல்லாவற்றையுமே விற்பனை செய்து வருகிறோம். கொலு பொம்மைகளில் எங்களிடம் தட்சிணாமூர்த்தி, அம்மன் சிலைகள், நெல்லையப்பர், அஷ்ட பைரவர், நவ நரசிம்மர், சக்கரத்தாழ்வார், கபாலீஸ்வரர்-கற்பகாம்பாள்,
மீனாட்சி கல்யாணம், அயோத்தி ராமர், நவத் திருப்பதி, பிரம்மோற்சவ செட், விஸ்வரூப அம்மன், பக்த பிரகலாதா, அகல்யா மோட்சம், தசரா திருவிழா பொம்மைகள், திரெளபதி செட், ராமானுஜர், ராவணன் தர்பார், சூரிய பகவான், வடூவர் ராமன், சவுந்தரராஜன் செட், நவசக்தி, அயோத்தி கோவில் போன்றவை இந்த வருடம் புது வரவாக இருக்கிறது. எங்களிடம் மண் மற்றும் பேப்பரில் செய்து பிராஸ் கோட்டிங் செய்த பொம்மைகள், மார்பிள் செட் பொம்மைகள், மரப்பொம்மைகளும் விற்பனைக்கு உள்ளது. இது தவிர தியா ஸ்டேண்ட், கிஃப்ட் பொருட்கள், கண்ணாடி மற்றும் மார்பிளில் செய்த பொருட்கள், மேக்னட்டிக் டைப் ஸ்டிக்கர் போன்றவையும் விற்பனை செய்து வருகிறோம். கொலுவிற்கு மிகவும் முக்கியமானது பொம்மைகளை வைக்க பயன்படுத்தப்படும் கொலுப்படி.
இது டிஸ்மாண்டபில் என்பதால் தேவையான போது நாமே அதை செட் செய்து கொள்ளலாம். இது தவிர எங்களுடைய ஸ்பெஷல் என்றால் பொம்மைகளை பேக்கிங் செய்யும் விதம். பொம்மைகள் உடையாமல், நிறம் போகாமலும் பத்திரமாக பேக்கிங் செய்து இந்தியா மற்றும் வெளிநாடுகளுக்கு குறைந்த விலையில் அனுப்பி வருகிறோம். கொலு பொம்மைகள் வேண்டும் என எங்களை அழைத்தால் அவர்களுக்கு வீடியோ கால் வழியாக கொலு பொம்மைகளை காட்டுவோம். பிடித்த பொம்மைகளை தேர்வு செய்தால் அதை சிறப்பான முறையில் பேக்கிங் செய்து உடனடியாக அனுப்பி வைத்து விடுவோம். கொலு பொம்மைகளுக்கென பிரத்யேகமான கடையாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்’’ என்கிறார் வினோத் பாலாஜி.
மா.வினோத்குமார்
ஆ.வின்சென்ட் பால்
The post வெளிநாட்டிற்கு பறக்கும் மயிலாப்பூர் கொலு பொம்மைகள்! appeared first on Dinakaran.