ஸுதா ஸாகர மத்யஸ்தா
ஸுதா ஸாகர மத்யஸ்தா என்கிற இந்த நாமத்தின் சிறப்பே எடுத்த எடுப்பிலேயே அம்ருதமான கடலின் நடுவில் என்று உயர்ந்த விஷயத்தை தெரிவிக்கின்றது. ஸுதா என்றால் அமிர்தம். ஸுதா ஸாகரம் – அம்ருதக் கடல். மத்யஸ்தா என்றால் நடுவில் இருப்பவள். அம்ருத மயமான கடலின் நடுவில் இருப்பவள். யாரால் அம்ருத மயமான கடலின் இருக்கிறாளோ, அவளால் மட்டும்தான் நமக்கு அம்ருதத்துவத்தை பிரசாதிக்க முடியும். அப்போது அம்ருதத்தை யார் பிரசாதிக்கிறாளோ, அம்ருதம் என்கிற அழிவற்ற தன்மையை யார் வந்து நமக்கு காண்பித்துக் கொடுக்கிறாளோ அவளே இங்கு ஸுதா ஸாகர மத்யஸ்தா என்று இருக்கிறாள்.
ஏனெனில், நமது சொரூபம் அழிவற்ற தன்மை. அதனால்தான் உபநிஷதம் அம்ருதஸ்ய புத்ரஹா… என்று கோஷிக்கின்றது. விவேகானந்தருக்கு மிகவும் பிடித்த மகாவாக்கியம் இது. அம்பிகையானவள் அம்ருதேஸ்வரி. அப்படிப்பட்ட அம்பிகையினுடைய புத்திரர்கள் நாம். அந்த அம்ருதேஸ்வரி எங்கு இருக்கிறாள் எனில், அம்ருதக் கடலின் நடுவே இருக்கிறாள். அப்போது இந்த நாமாவை ஒருவர் சொல்லும்போது அவர்களுக்கு இந்த அம்ருதத்துவம் என்கிற சொரூபம் தரிசனம் கிட்டுகின்றது.
நம்முடைய தினப்படி வாழ்வில் அது உணவிலிருந்து கூட தொடங்கட்டும், நாம் எதையெல்லாம் நினைக்கிறோமோ, அதிலிருந்து ஆரம்பித்து நமது சொரூபமான அம்ருதத்துவம் என்ற மிக உயர்ந்த நிலையை அளவிற்கு எல்லாவற்றையும் தரக்கூடியவளாக இருக்கிறாள் என்பதே இந்த நாமத்தின் அடிநாதமாகும்.
இப்போது நாம் கொஞ்சம் பின்னோக்கி சில நாமத்தை பார்ப்போம் வாருங்கள். அதாவது, ஸுமேரு மத்ய ஸ்ருங்கஸ்தா… என்று தொடங்கி, மந் நகர நாயிகா… சிந்தாமணி க்ருஹாங்கஸ்தா… பஞ்ச பிரஹ்மாஸனா ஸ்திதா.. மஹா பத்மாடவி, கதம்ப வன வாஸினி என்றெல்லாம் பார்த்தோம். இப்போது மஹாபத்மாடவி, கதம்ப வன வாஸினி என்றெல்லாம் சொல்லும்போது அம்பிகையினுடைய விசேஷ ஸ்தானங்கள் என்று சொன்னோம். ஸுமேரு மத்ய ஸ்ருங்கம். அதில் இருக்கக்கூடிய நகரம் இவையெல்லாம் அம்பாளுடைய உலகம் ஸ்ரீபுரம் என்று சொன்னோம்.
இப்போது சம்பிரதாயமாக வித்யா சம்பிரதாயத்தில் என்ன விசேஷம் சொல்லப்படுகிறதெனில், ஸுமேரு மத்ய ஸ்ருங்கத்தில் எப்படி ஒரு ஸ்ரீநகரம் ஒரு ஸ்ரீபுரம் இருக்கிறதோ, அதேமாதிரி ஒரு ஸ்ரீநகரத்தை, ஸ்ரீபுரத்தை வர்ணிக்கும்போது இன்னொரு வர்ணனையும் சேர்ந்தமாதிரி சொல்கிறார்கள். இப்போது அதே ஸ்ரீநகரம் ஸ்ரீபுரமானது சம்பிரதாயத்தில் இன்னொரு இடத்திலும் இருப்பதாக சொல்லப்படுகின்றது. ஸ்ரீநகரம் ஸ்ரீபுரம் என்று சொன்னால், இரண்டு விதமாக சம்பிரதாயம் வர்ணிக்கின்றது. ஒன்று ஸுமேருவில் இருப்பதாக வர்ணிக்கின்றது. இன்னொன்று ஸுதா ஸாகரம் என்று சொல்லக்கூடிய, அம்ருதமயமான கடலுக்கு நடுவே இருப்பதாக வர்ணிக்கின்றது.
இப்போது அம்ருதமயமான அந்தக் கடலுக்கு நடுவே இருக்கும்போது அந்த இடத்திற்கு ஒரு அற்புதமான பெயரைக் குறிப்பிடுகின்றது. அந்த அழகான தீவிற்கு மணித்வீபம் என்று பெயர். த்வீபம் என்றால் தீவு என்றுபொருள். இந்த மணி த்வீபத்திற்கு நடுவில் ஸ்ரீநகரம் இருக்கிறது. இந்த ஸ்ரீநகரத்திற்கான வர்ணனைகள் அனைத்துமே, இதற்கு முன்பு பார்த்த ஸ்ரீமந் நகர நாயிகா என்கிற நாமாவின் வர்ணனைகளோடு அப்படியே பொருந்தும்.
இப்போது ஸுமேரு மத்யத்தில் ஒரு ஸ்ரீநகரம் இருக்கிறது என்று பார்த்தோம். அங்கு இருபத்தைந்து கோட்டைகளையும் அதையும் தாண்டி சிந்தாமணி க்ருஹம் இருக்கிறது. மஹாபத்மாடவி, கதம்பவனம் என்றெல்லாம் பார்த்தோம். அதற்கு எப்படியெல்லாம் வர்ணித்தோமோ அதை அனைத்தையும் கொண்டு வந்து இதற்கும் அப்படியே பொருத்திப் பார்க்க வேண்டும். இதில் ஒரேயொரு வித்தியாசம் என்னவெனில், ஸ்ரீநகரம் என்பது அங்கு ஸுமேருவினுடைய உச்சியில் இருந்தது. இங்கு ஸுதா ஸாகரத்திற்கு நடுவே இருக்கிறது. அவ்வளவுதான் வித்தியாசம். ஸுதா ஸாகரத்திற்கு நடுவில் மணித்வீபத்தில் ஸ்ரீநகரம் இருக்கிறது. இங்கு ஸ்ரீநகரம் என்பதில் ஸ்தானம் மட்டுமே வேறு. அதாவது முதலில் சொன்ன ஸ்ரீநகரம் மலையின் உச்சியில் இருந்தது. இப்போது சொன்னது கடலின் நடுவே இருக்கிறது. இது ஸ்ரீவித்யா சம்பிரதாயத்தில் சம்பிரதாயமாக சொல்லக் கூடிய விஷயம்.
நாம் இதற்கு முன்பு பார்த்த நாமங்களின் விளக்கங்களை லலிதா ஸ்தவ ரத்னம் என்று சொல்லக்கூடிய ஆர்யா த்விசதியை வைத்துத்தான் பார்த்தோம். ஆர்யா த்விசதியில் லலிதா ஸ்தவ ரத்னத்தில் துர்வாசர் ஸுமேரு பர்வதத்தில் இருக்கிற ஸ்ரீநகரத்தை வர்ணிக்கிறார். ஆனால், அதேநேரத்தில் ஆதிசங்கரர் சௌந்தர்ய லஹரியில் ஸுதா சாகரத்தில் இருக்கின்ற ஸ்ரீநகரத்தை வர்ணிக்கிறார். சௌந்தர்ய லஹரியில் எடுத்துப் பார்த்தால், ஸுதா ஸாகரம் என்கிற அம்ருதக் கடலில் மத்தியில் இருக்கக்கூடிய ஸ்ரீநகரத்தின் வர்ணனைதான் வரும். ஸுதா சிந்தோர் மத்யே… என்றுதான் அந்த ஸ்லோகம் தொடங்கும்.
இப்போது ஸ்ரீநகரம் என்று சொல்லும்போது ஸுமேரு ஸ்ருங்கத்திலும் உள்ளது. ஸுதா சாகரம் என்ற அம்ருத ஸாகரத்திலுள்ள மணி த்வீபத்திலும் அமைந்துள்ளது. ஒரு சாதகன் இதுவரையிலும் ஸுமேரு ஸ்ருங்கத்தில்தான் நகரம் இருப்பதை அறிந்தான். இப்போது ஸுதா சாகரம் என்கிற மணி த்வீபத்திலும் இருக்கிறது என்பதை இப்போது அறிகின்றான். அப்படி காண்பித்துக் கொடுப்பதில் என்ன உள்ளர்த்தம் இருக்க முடியும் என்பதையும் பார்ப்போம். இப்போது ஸ்ரீவித்யாவில் இந்த விஷயத்தை பார்ப்பதுபோல, ஸ்ரீவைஷ்ணவத்திலும் இதுபோன்ற விஷயம் உண்டு.
ஏனெனில், நாம் ஏற்கனவே அம்பாளினுடைய புருஷ ரூபம்தான் விஷ்ணு என்று பார்த்திருக்கிறோம். ஸ்ரீமந் நாராயணனுடைய ஸ்த்ரீ ரூபம்தான் அம்பாள் என்றும் பார்த்தோம். அதனால்தான் இதேமாதிரி விஷயம் ஸ்ரீவைஷ்ணவத்திலும் உண்டு. எப்படி உண்டெனில், ஸ்ரீவைஷ்ணவத்தில் வைகுண்டம் என்பது பரமநாதனாக பரமபதத்தில் இருக்கிறது. அதுபரம் என்கிற நிலை. அங்கு வைகுண்டத்தில் பரமபதநாதனாக ஆதிசேஷனாக ஆதிசேஷ பீடத்தில் ஸ்ரீதேவி பூதேவி நீளா தேவி சமேதராக பரவாசுதேவராக இருக்கிறார். அதே பெருமாள், திருப்பாற்கடலுக்கு மத்தியிலேயும், ஸ்ரீராப்தி மத்தியிலேயேயும் அதே ஆதிசேஷ பீடத்தில் தாயாரோடும் பிராட்டியாரோடும் இருக்கிறார்.
எப்படி வைகுண்டத்தில் இருக்கக் கூடிய பெருமாள், பாற்கடலுக்கு மத்தியில் இருக்கிறாரோ அந்த நிலைக்கு வியூக நிலை என்று சொல்கிறோம். பர மூர்த்தியான பரவாசுதேவர் பரமபதத்திலேயும்… எப்படி இருக்கிறாரோ அதேமாதிரி ஸ்ரீமந் நாராயணனின் ஸ்த்ரீ ரூபமாக (பெண் உருவாக) இருக்கக் கூடிய அம்பாளும் ஸுமேரு மத்ய ஸ்ருங்கத்தில் இருக்கக் கூடிய ஸ்ரீநகரத்திலும், அதேபோன்று ஸுதா ஸாகரம் என்கிற அம்ருத கடலுக்கு மத்தியிலும் இருக்கிறாள். நாம் இந்த ஸ்ரீவைஷ்ணவம் மற்றும் ஸ்ரீவித்யாவிலுள்ள சம்பிரதாயத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து புரிந்து கொண்டோம்.
(சுழலும்)
The post அமுதக் கடலில் அம்பிகை appeared first on Dinakaran.