×

நகராட்சி திடக்கழிவுகள் ஆற்றல் திட்டத்தில் முதலீடு ெசய்யக்கோரி தொழிலதிபரிடம் ₹16 கோடி மோசடி சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை

சென்னை: நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றல் திட்டத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் கிடைக்கும் என்று தொழிலதிபர் ஒருவரிடம் ₹16 கோடி பெற்று மோசடி செய்த வழக்கில், பிரபல சினிமா தயாரிப்பாளரும் நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று அதிரடியாக கைது செய்தனர். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் பாலாஜி என்பவர் சில நாட்களுக்கு முன்பு புகார் ஒன்று அளித்தார். அதில், கடந்த 2020ம் ஆண்டு முதல் சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் என்பவர் அறிமுகமானார்.

அவர் நகராட்சி திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் ஆரம்பிக்க உள்ளதாகவும், அந்த திட்டத்தின் மதிப்பு ₹200 கோடி என்றும், அதில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் வரும் என்று ஆசைவார்த்தை கூறினார். அதற்கு நான் ஒப்புக்கொண்டேன். பிறகு அவர் திட்டம் ஆரம்பிப்பதற்கான போலியான ஆவணங்களை காண்பித்து ₹16 கோடி வரை முதலீடு செய்ய வைத்தார். ஆனால் ெசான்னப்படி அவர் திட்டத்தை ஆரம்பிக்கவில்லை. இதுகுறித்து நான் பலமுறை கேட்டும் அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. பிறகு நான் கொடுத்த ₹16 கோடியை திரும்ப கேட்டேன், அதற்கு அவர் வாங்கிய பணத்தை திரும்ப கொடுக்காமல் மிரட்டி வருகிறார். எனவே அவரிடம் இருந்து ₹16 கோடியை திரும்ப பெற்று தர வேண்டும் என்று புகாரில் கூறியிருந்தார்.

புகாரின்படி விசாரணை நடத்த போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் மகேஸ்வரிக்கு உத்தரவிட்டார். அதன்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். அதில், சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தும் ரவீந்தர், திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றுதல் திட்டம் தொடங்க இருப்பதாக போலி ஆவணம் தயாரித்து அதை தொழிலதிபர் பாலாஜியிடம் காண்பித்து ₹16 கோடி பணத்தை பெற்று மோசடி செய்தது உறுதியானது.

அதைதொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் சென்னை அசோக்நகர் 19வது அவென்யூ பகுதியில் வசித்து வந்த சினிமா தயாரிப்பாளரும், நடிகை மகாலட்சுமியின் கணவருமான ரவீந்தரை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து மோசடி நிறுவனம் தொடங்க போலியாக தயாரித்த ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு ரவீந்தரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் எழும்பூரில் உள்ள மத்திய குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

சினிமா தயாரிப்பாளர் ரவிந்தர் மீது அமெரிக்காவில் உள்ள இன்ஜினியர் ஒருவரிடம் சினிமா எடுப்பதாக ₹15 லட்சம் பணம் பெற்று மோசடி செய்த வழக்கு மத்திய குற்றப்பிரிவில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

The post நகராட்சி திடக்கழிவுகள் ஆற்றல் திட்டத்தில் முதலீடு ெசய்யக்கோரி தொழிலதிபரிடம் ₹16 கோடி மோசடி சினிமா தயாரிப்பாளர் ரவீந்தர் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Resayakkori ,Rawinder ,Chennai ,Dinakaran ,
× RELATED திருவல்லிக்கேணி பகுதிகளில் பைக்கில்...