×

இரு மாதங்களாக ஊட்டியில் நடந்து வந்த குதிரை பந்தயம் நேற்றுடன் நிறைவு

ஊட்டி : இரு மாதங்களாக ஊட்டியில் நடந்து வந்த குதிரை பந்தயம் நேற்றுடன் நிறைவடைந்தது. ஆண்டு தோறும் நீலகிரி மாவட்டத்தில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை சீசன் அனுசரிக்கப்படுகிறது. இச்சமயங்களில் வெளி மாவட்டங்களில் இருந்து நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அதேசமயம், கோடை சீசன் போது ஊட்டி வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் பொருட்டு அரசு மற்றும் தனியார் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

குறிப்பாக, தோட்டக்கலைத்துறை சார்பில் காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, மலர் கண்காட்சி, பழக் கண்காட்சியும், வருவாய்த்துறை சார்பில் வாசனை திரவியப் பொருட்கள் கண்காட்சியும் நடத்தப்படுகிறது. மேலும், சுற்றுலாத்துறை சார்பில் படகு போட்டிகள் மற்றும் கோடை விழா ஆகியவைகள் நடத்தப்படுகிறது.

தனியார் சார்பில் நாய்கள் கண்காட்சி, குதிரை பந்தயம் ஆகியவை நடத்தப்படுகிறது. ஆண்டு தோறும் ஏப்ரல் 14ம் தேதி ஊட்டியில் உள்ள குதிரை பந்தய மைதானத்தில் குதிரை பந்தயம் துவங்கி இரு மாதங்கள் வரை நடக்கும். ஆனால், ஜூன் மாதத்தில் மழை குறுக்கிடும் நிலையில் சில போட்டிகள் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், சில போட்டிகளை ரத்து செய்யப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு இம்முறை கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி குதிரை பந்தயம் துவக்கப்பட்டது.

முக்கிய போட்டிகளான நீலகிரிஸ் 1000 கினீஸ், நீலகிரிஸ் 2000 கினீஸ், நீலகிரி டெர்பி ஸ்டேக்ஸ் கிரேட் 1, நீலகிரி தங்க கோப்பை உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. இதனை உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பலர் கண்டு ரசித்தனர். அதேபோல், வெளி மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் உள்ளூர் மக்கள் பலரும் கலந்துக் கொண்டு விளையாடினர்.
நாளை மறுநாள் போட்டிகள் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஊட்டியில் நாள் தோறும் மழை பெய்து வரும் நிலையில், முன்னதாகவே போட்டிகளை மெட்ராஸ் ரேஸ் கிளப் முடித்துக் கொண்டது. நேற்றும் பல்வேறு போட்டிகள் நடந்தது. இதனை பலரும் கண்டு ரசித்தனர்.

The post இரு மாதங்களாக ஊட்டியில் நடந்து வந்த குதிரை பந்தயம் நேற்றுடன் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Nilgiri District, Nilgiri District ,Dinakaran ,
× RELATED உயிர்களை பறிக்கும் ஆன்லைன்...