×

சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்ததாக ஜாபர் சாதிக் சகோதரர் கைது: மனைவி அளித்த வாக்குமூலத்தின்படி அமலாக்கத்துறை நடவடிக்கை

சென்னை: போதைப்பொருட்கள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீமை அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். வெளிநாடுகளுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் ஏற்றுமதி என்ற பெயரில் ரூ.2 அயிரம் கோடி அளவுக்கு போதை பொருள் கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை தேசிய போதை தடுப்பு பொருள் பிரிவினர் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் போதை பொருள் மூலம் வந்த வருமானத்தை சட்டவிரோதமாக பல தொழில்களில் முதலீடு செய்து இருந்தது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஜாபர் சாதிக் மீது சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்ததாக தனியாக வழக்கு பதிவு செய்து கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஜாபர் சாதிக் மற்றும் அவரது நெருங்கிய நண்பரும், இயக்குநரான அமீர், அப்துல் பாசித் புகாரி, சயத் இப்ராகிம், ரகு உள்ளிட்டோருக்கு சொந்தமான 20 இடங்களில் சோதனை நடத்தினர். இந்த சோதனையை தொடர்ந்து திகார் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த வாரம் 3 நாட்கள் விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையை தொடர்ந்து சென்னையில் உள்ள ஜாபர் சாதிக் மனைவி அமீனா மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோருக்கு நேரில் ஆஜராக சம்மன் அனுப்பினர். அந்த சம்மனை தொடர்ந்து ஜாபர் சாதிக்கின் மனைவி அமீனா கடந்த மே 20ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினார். அவரிடம் அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தி வாக்கு மூலம் பெற்றனர். அதனை தொடர்ந்து ஜாபர் சாதிக் சகோதரர் முகமது சலீமிடம் கடந்த மே 21ம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர்.

இருவரின் விசாரணையை தொடர்ந்து மீண்டும் ஜாபர் சாதிக்கிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, போதை பொருட்கள் மூலம் கிடைத்த வருமானத்தை சட்டவிரோதமாக பல தொழில்களில் முகமது சலீம் முதலீடு செய்ததை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் முகமது சலீமை நேற்று கைது செய்தனர். இந்த வழக்கில் சட்டவிரோதமாக பணத்தை முதலீடு செய்த நிறுவனங்கள் மீதும் விரைவில் நடவடிக்கை பாயும் என அமலாக்கத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட முகமது சலீம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன்பாக நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், போதை பொருள் கடத்தல் மூலம் கிடைத்த கோடிக்கணக்கான பணத்தை போலி நிறுவனங்கள் தொடங்கி அதில் முதலீடு செய்துள்ளார்.

அதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்று நீதிபதியிடம் தெரிவித்தார். முகமது சலீம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காளிசரண், விசாரணைக்கு ஆஜராகி முழு ஒத்துழைப்பு அளித்த நிலையில் அவரது கைது தேவையற்றது என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முகமது சலீமை வரும் 27ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

The post சட்டவிரோத பணம் பரிமாற்றம் செய்ததாக ஜாபர் சாதிக் சகோதரர் கைது: மனைவி அளித்த வாக்குமூலத்தின்படி அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Zafar Sadiq ,CHENNAI ,Enforcement Directorate ,Mohammad Salim ,Dinakaran ,
× RELATED வடமதுரை அருகே 200 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் ஒருவர் கைது