×

அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் சூளைமேடு, அஞ்சுகம் தொடக்கப்பள்ளியில் ரூ.13.94 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள பள்ளி கூடுதல் கட்டடங்களை திறந்து வைத்து, அப்பள்ளிகளின் மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்கள் மற்றும் மிதிவண்டிகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வழங்கினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.06.2025) இந்து சமய அறநிலையத் துறை சார்பில் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 11.15 கோடி ரூபாய் செலவில் தரை மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைக் கட்டடம், சூளைமேடு, அஞ்சுகம் தொடக்கப்பள்ளியில் 2.79 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடம், கலையரங்கம், கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் மற்றும் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடத்தை மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்து, பள்ளி மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித் தொகையாக ரூ.10,000/-, கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பைகள் மற்றும் மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்து சமய அறநிலையத்துறை நிர்வாக கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் வழிபாட்டுத் தலங்களாக மட்டுமல்லாமல் சமூக நோக்கத்தோடு செயல்படும் அறநிலையங்களாகவும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில், திருக்கோயில்கள் சார்பில் கல்வி நிறுவனங்கள், பயிற்சி பள்ளிகள், கருணை இல்லங்கள், மூத்த குடிமக்கள் உறைவிடங்கள், மனநலக் காப்பகம், மருத்துவ மையங்கள் போன்றவை நடத்தப்பட்டு வருகின்றன.

திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் 25 பள்ளிகள் மற்றும் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி உட்பட 10 கல்லூரிகளில் 22,455 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர். கடந்த நான்காண்டுகளில் இப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 138.13 கோடி ரூபாய் செலவில் கூடுதல் வகுப்பறை கட்டடங்கள், ஆய்வகங்கள், நூலகங்கள், கலையரங்கம், விளையாட்டு மைதானம் மேம்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான இடத்தில் நடத்தப்பட்டு வந்த சீதா கிங்ஸ்டன் மெட்ரிக்குலேஷன் பள்ளியானது பொருளாதார நெருக்கடியால் திருக்கோயிலுக்கு செலுத்த வேண்டிய வாடகையை நீண்ட காலமாக செலுத்த முடியாத சூழலில் பள்ளியை திருக்கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அப்பள்ளியை திருக்கோயில் நிர்வாகமே ஏற்று நடத்திட உத்தரவிட்டதை தொடர்ந்து, 2021-ஆம் ஆண்டு முதல் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியாக நடத்தப்பட்டு வருகிறது. இப்பள்ளிக்கு ஏற்கனவே 1.66 கோடி ரூபாய் செலவில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது இப்பள்ளியில் 981 மாணவ, மாணவியர் கல்வி பயின்று வருகின்றனர்.

காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு 11.15 கோடி ரூபாய் செலவில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களில் முதல்வரின் கல்விச்சோலை வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகளுடன் கூடிய 32 வகுப்பறைகள், ஆசிரியர் ஓய்வறைகள், கணினி அறை, ஆய்வுக் கூடங்கள், நூலகம், மின்தூக்கி மற்றும் அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள கட்டடம்;

சூளைமேடு, அஞ்சுகம் தொடக்கப்பள்ளிக்கு 2.79 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள உணவருந்தும் கூடம், கலையரங்கம், கழிவறைகள், மேம்படுத்தப்பட்ட விளையாட்டு மைதானம் மற்றும் புனரமைக்கப்பட்ட பள்ளிக் கட்டடம்;

என மொத்தம் 13 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவிலான கூடுதல் பள்ளிக் கட்டடங்களை மாணவச் செல்வங்களின் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, முதலமைச்சர் அவர்கள் காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியின் கூடுதல் வகுப்பறை கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ள முதல்வரின் கல்விச்சோலை வகுப்பறைகள் மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதிகளுடன் கூடிய 32 வகுப்பறைகள், கணினி அறை மற்றும் ஆய்வகங்களை நேரில் பார்வையிட்டார்.

மேலும், முதலாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்பு வரையிலான வகுப்பறைகளுக்கு சென்று பாடம் கற்பிப்பதை பார்வையிட்டு, மாணவ, மாணவியர்களிடம் கலந்தரையாடினார். அத்துடன் ஆய்வகங்களில் மாணவ, மாணவியர்கள் மேற்கொண்ட செய்முறை ஆய்வுகளையும் பார்வையிட்டார்.

மேலும், இப்பள்ளியில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் பயிலும் 252 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகையாக ரூ.10 ஆயிரம், ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளி மற்றும் சூளைமேடு அஞ்சுகம் தொடக்கப் பள்ளியில் பயிலும் 1,131 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பைகள் மற்றும் ஏகாம்பரநாதர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளில் பயிலும் 166 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கிடும் அடையாளமாக 10 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை, 10 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்களுடன் கூடிய புத்தகப்பைகள் மற்றும் 40 மாணவ, மாணவிகளுக்கு மிதிவண்டிகளையும் வழங்கினார். முன்னதாக மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளையும் பார்வையிட்டார்.

The post அருள்மிகு ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.11.15 கோடி மதிப்பீட்டில் கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Arulmigu Ekamparanathar Matriculation Secondary School ,K. Stalin ,Chennai ,Kanchipuram ,Sulaimedu ,Anjukam Elementary School ,Tamil Nadu ,Arulmigu Ekamparanathar Matriculation Secondary School Campus ,Dinakaran ,
× RELATED மகாராஷ்டிரா, குஜராத்தை பின்னுக்கு...