×

ஈரோட்டில் ‘ஈஷா கிராமோத்சவம்’: கிராமத்து இளைஞர்களை இல்லத்திற்கு அழைத்து பாராட்டிய அமைச்சர் முத்துசாமி!

ஈஷா சார்பில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டிகள் ஈரோட்டில் நாளை நடைபெற உள்ளது. இந்நிலையில், அதில் ஈரோடு மாவட்டத்தில் இருந்து பங்கேற்கும் கிராமத்து இளைஞர்களை தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் தனது இல்லத்திற்கு நேரில் அழைத்து வாழ்த்து கூறினார். விளையாட்டு போட்டிகள் மூலம் கிராமப்புற மக்களிடம் புத்துணர்வை உருவாக்கும் நோக்கத்துடன் ஈஷா கிராமோத்சவம் திருவிழாவை ஈஷா அவுட்ரீச் அமைப்பு 2004-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், 15-வது ஈஷா கிராமோத்சவம் திருவிழா இந்தாண்டு தென்னிந்திய அளவில் நடைபெறுகிறது.

முதல்கட்ட போட்டிகள் ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் மண்டல அளவிலான போட்டிகள் நாளை பல்வேறு இடங்களில் நடைபெறுகிறது. அதில் ஒரு பகுதியாக, ஈரோடு மாவட்டம் கொமரப்பாளையத்தில் உள்ள எக்ஸல் கல்லூரியில் மண்டல அளவிலான போட்டிகள் நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இதில் ஈரோடு, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 300-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கணைகள் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், கிளெஸ்டர் அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற ஈரோட்டு கிராமத்து இளைஞர்களை தமிழக வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி அவர்கள் தனது இல்லத்திற்கு இன்று (செப்.9) நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் வாலிபால் போட்டியில் முதலிடம் பிடித்த ஓரிச்சேரி புதூர் அணி வீரர்களும், பெண்களுக்கான த்ரோபால் போட்டியில் முதலிடம் பிடித்த பெருமாள் பாளையம் அணி வீராங்கணைகளும் அமைச்சரிடம் வாழ்த்து பெற்றனர். அமைச்சர் அவர்கள் வீரர்களுடன் கலந்துரையாடும் போது மண்டல அளவிலான போட்டியிலும் ஈரோட்டு அணிகள் வெற்றி வாகை சூட வேண்டும் என்று வாழ்த்தினார். எக்ஸல் கல்லூரியில் நாளை நடைபெறும் விளையாட்டு போட்டிகளை பொதுமக்கள் இலவசமாக நேரில் கண்டு களிக்கலாம். சிறுவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான பொழுதுப் போக்கு விளையாட்டு போட்டிகள் மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடைபெறும்.

The post ஈரோட்டில் ‘ஈஷா கிராமோத்சவம்’: கிராமத்து இளைஞர்களை இல்லத்திற்கு அழைத்து பாராட்டிய அமைச்சர் முத்துசாமி! appeared first on Dinakaran.

Tags : Isha Kramotshavam ,Erote ,Minister ,Muthusamy ,Isha ,Erode ,Isha Gramotshavam ,Erot ,Minister Muthusamy ,
× RELATED தமிழகத்தை சேர்ந்தவர் ஒடிசாவை ஆள வேண்டுமா? : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா கேள்வி