×

அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுவதா? அயோத்தி சாமியார் மீது கிரிமினல் வழக்குப்பதிய வேண்டும்: உ.பி. அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

சென்னை: அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு கொலை மிரட்டல் விடுத்த, அயோத்தி சாமியார் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று உ.பி., அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சென்னையில் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை திரித்து ஆர்எஸ்எஸ், பாஜ பரிவாரம் பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட உயர் பொறுப்புகளில் உள்ளவர்களே உண்மைக்கு மாறாகப் பேசி தேவையற்ற சர்ச்சையை உருவாக்கி வருகின்றனர். இது வன்மையான கண்டனத்திற்கு உரியது.

அயோத்தியைச் சேர்ந்த சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியா என்பவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படத்தை கத்தியால் குத்தியும், தீயிட்டு எரித்தும் மிரட்டியுள்ளதோடு, அமைச்சரின் தலையை சீவிக்கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசாக வழங்கப்படும் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதற்கு பரவலான கண்டனம் எழுந்துள்ள போதும், தேவைப்பட்டால் பரிசுத் தொகையை அதிகரிக்க தயார் என்று அவர் மேலும் மிரட்டியுள்ளார். ஒரு கருத்தை கருத்தால் எதிர்கொள்வதற்கு பதிலாக படுகொலை செய்ய அறைகூவல் விடுப்பது பாசிச தன்மை வாய்ந்த கிரிமினல் செயல் ஆகும்.

ஒரு மடாதிபதியே கொலை வெறியைத் தூண்டும் கிரிமினல் குற்றவாளியாக நடந்து கொள்வது மிக வெட்கக் கேடானது. அவரது இந்த செயலை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு செய்வது சட்டப்பூர்வமாக தண்டிக்கத்தக்க குற்றமாகும். எனவே, உ.பி. மாநில அரசு, சாமியார் பிரம்ஹன்ஸ் ஆச்சாரியா மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

The post அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டல் விடுவதா? அயோத்தி சாமியார் மீது கிரிமினல் வழக்குப்பதிய வேண்டும்: உ.பி. அரசுக்கு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi ,Ayodhya ,U.P. ,Marxist ,Chennai ,Udayanidhi Stalin ,U.P. Marxist ,
× RELATED கலைஞரின் சாதனைகள் மக்கள் மனதில்...